மக்களின் நம்பிக்கை வீண் போய்விடக் கூடாது

காணாமல்போனோர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அவசியப்படுமானால் சர்வதேச உதவிகள் பெற்றுக்கொள்ளப்படுமெனத் தெரிவித்திருக்கும் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை இம்மாதம் 30 ஆம் திகதியன்று ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் கையளிக்கப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். சர்வதேச காணமல் போனோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதியென்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி அலுவலகம் மேற்கொண்டு முன்னெடுக்கவிருக்கும் விடயங்கள் குறித்து நேற்று முன்தினம் அவர் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார்.

காணாமல்போனோர் விடயத்தில் எமது அலுவலகம் என்ன செய்ய முடியும்? என்பதை தனித்து எதனையும் கூறமுடியாதெனவும், இது விடயத்தில் தடைகளை விட சவால்களே அதிகம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியிருகின்றார். இந்தச் சவால்களை வெற்றிகொள்வதற்கான வழிவகைகளைக் கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நீண்ட காலமாகக் காணப்படும், மன அவலங்களை ஏற்படுத்தியிருக்கும் காணாமல்போனோர் விடயத்தில் எடுத்த எடுப்பில் எந்தத் தீர்வையும் முன்வைக்கக்கூடிய சாத்தியம் இல்லை என்பதையே சாலிய பீரிஸின் தகவல் வெளிப்படுத்தியிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

1983 முதல் இதுவரையில் 21 ஆயிரத்துக்கும் கூடுதலானோர் காணாமல் போயிருக்கலானமென அன்னளவாக தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் சரியான எண்ணிக்கை என்று உறுதியாகக் கூறவியலாது. ஆய்வுகளும், விசாரணைகளும் தொடர்வதால் இறுதி எண்ணிக்கையை முழுமையான அறிக்கை வெளிவரும்போதே அறிந்துகொள்ள முடியும். இந்தப் பணி கடுமையானதென்பதை மறுத்துரைக்க முடியாது. என்றாலும் கூட சாத்தியமான சகல வழிகளையும் மேற்கொண்டு முழுமையான அறிக்கையை தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கூடுதலாக காணாமலாக்கப்பட்டவர்கள் வடபுலத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களின் உறவுகள் நீண்டகாலமாக கண்ணீர் சிந்தியவாறு அழுது புலம்பிக்கொண்டிருக்கின்றனர். அப்படிக் காணாமல்போனோர் குறித்த உண்மையான தகவல்களையாவது தமக்குப் பெற்றுத் தருமாறு உறவுகள் வலியுறுத்தி வருகின்றனர். இது விடயத்தில் அரசு பாரா முகமாகச் செயற்பட்டு வருவதாகவே உறவுகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஜனாதிபதியும், பிரதமரும் நீதி கிடைக்கச் செய்வோமென உத்தரவாதமளித்திருப்பதால் அந்த உறவுகள் ஓரளவு நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர். காலம் தாழ்த்தாமல் தமக்குத் தீர்வு பெற்றுத்தருமாறு உறவுகள் நல்லாட்சி அரசைக் கேட்டிருக்கின்றனர்.

இதன் பொருட்டே அரசு காணாமல் போனோர் குறித்து விசாரிப்பதற்கான குழுவை அமைத்தது. 6 மாதங்கள் கடந்த நிலையிலும் பூரணமான அறிக்கையை தயாரிக்க முடியாத நிலைக்கு குழு தள்ளப்பட்டுள்ளது. காணாமல் போனோரின் எண்ணிக்கை 21 ஆயிரம் எனக் கூறப்படுகின்றபோதும் அது சரியான தரவாகக் கூற முடியாது என குழுவின் தலைவர் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியதொன்றாகும். 30 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருப்பது இடைக்கால அறிக்கை மட்டுமே. விசாரணைகளை முன்னெடுப்பதில் பல நெருக்கடிகள் காணப்படுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இதனை தடைகளாக அவர் கருதவில்லை. சவால் என்றே கூறுகின்றார். சவால்களை வெற்றிகொள்ள சில மாற்று வழிகளைக் கையாளப்போவதாகவும் கூறுகின்றார்.

பல்வேறு தரப்புகளிலுமிருந்து முரண்பாடான தகவல்கள் வெளியிடப்படுவதால் விசாரணைக் குழுவால் தீர்க்கமானதொரு முடிவை எட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே தான் சர்வதேச உதவிகளைப்பெற ஆலோசிப்பதாக சுட்டிக்காட்டப்படுவதை வரவேற்கவே வேண்டும். எந்த வழியிலேனும் காணாமல்போனவர்களின் உறவுகளுக்கு ஒரளவு தானும் மன ஆறுதலைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாட்டை அரசு கொண்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும்.

இந்த இடைக்கால அறிக்கையிலும் சில பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது எனினும் முழுமையான அறிக்கை வந்த பின்னரே பரிந்துரைகளை நிறைவேற்றக்கூடியதாக இருக்கும். எனவே மேலும் காலம் கடத்தாமல் துரிதமாக விசாரணைகளை முன்னெடுத்து முழுமையான அறிக்கை கையளிக்கப்படுவதோடு பரிந்துரைகளையும் நிறைவேற்றப்படக்கூடிய விதத்தில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

காணாமலபோனோர் பற்றிய தகவல்களை இதுவரையில் வெளியிடாதவர்களுக்கு மற்றொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அரசியல் மயப்படுத்தி அதில் ஆதாயம் தேட முற்படாமல் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் நிம்மதியடையவும், அவர்களுக்கு நியாயம் கிடைக்கவும் சகலரும் ஒத்துழைக்கவேண்டும். உண்மையை கண்டறிதலிலும், நீதியை நிலைநாட்டுவதிலும் உரிய கவனம் செலுத்தப்படவேண்டும். அடுத்த வாரம் வெளியிடப்படும் இடைக்கால அறிக்கையில் கூட இது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் முதற்கட்ட நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படுவது அந்த உறவுகளுக்கு ஆறுதல் தரக்கூடியதாக அமையலாம்.

எனவே காணாமல் போனோர் குறித்த விசாரணைக் குழு மீது பாதிக்கப்பட்ட மக்களும், நாடும் கொண்டிருக்கும் நம்பிக்கை வீண்போய்விடக்கூடாது. 30 ஆம் திகதிக்குப் பின்னரான அடுத்தகட்ட நகர்வுக்கு இடைக்கால அறிக்கை சாதகமாக அமையவேண்டுமென்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகும். ஆரோக்கியமான இந்த முயற்சி நல்ல சாதகமான பலனை ஏற்படுத்தி உறவுகளின் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டியது கட்டாயக் கடப்பாடாகும்.


Add new comment

Or log in with...