கணவர் காணாமல் போனமைக்கு காரணம் ராஜபக்ஷவினரே - சந்தியா எக்னலிகொட

தனது கணவர் காணாமல்போன விடயம் தொடர்பிலான இராணுவ அதிகாரிகளை சி.ஐ.டியிடம் கையளிக்குமாறு காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று (10) இராணுவத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
 
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே திருமதி எக்னலிகொட தெரிவித்திருந்தார். இராணுவ அதிகாரிகள் சிலருக்கு இவ்விடயம் தொடர்பில் சம்பந்தம் உள்ளதாக தனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தனது கணவர் கிரித்தலை அல்லது மின்னேரியா அல்லது மட்டக்களப்பு இராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
 
“எனது கணவர் காணமல் போனமை தொடர்பில் ராஜபக்ஷவினருக்கு தொடர்பு உள்ளது. அவரைக் கொலை செய்து விடுவார்களோ அவரை எங்களால் பார்க்க முடியாமல் போய்விடுமோ என நாங்கள் பயப்படுகின்றோம். எனவே யாராயினும் இது குறித்து தொடர்புபட்டிருப்பார்களேயானால் அவரை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க வேண்டும் என இராணுவ தளபதியிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
 
மைத்திரி-ரணில் அரசில் பிரகீத் காணாமல்போன விடயம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சி.ஐ.டியினர் அது குறித்த அறிக்கையினை இன்னும் வழங்கவில்லை என திருமதி எக்னலிகொட இதன்போது தெரிவித்திருந்தார்.
 
“எனது கணவர் காணாமல் போனமை தொடர்பில் சி.ஐ.டியினர் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான பணிப்புரையை ஜனாதிபதி அவர்கள் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
 
ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியிலிருக்கும்போது, எனது கணவர் காணாமல் போனமை தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. தற்போது, ஐ.ம.சு.மு ஆட்சிக்கு வந்தால் இவ்விடயம் குறித்து விசாரணை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதாகக் கூறுவது கேலிக்கூத்தான விடயமாகும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
 
கடந்த வாரம் பிரகீத் காணாமல் போனமை தொடர்பில் இரு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருந்ததோடு, குறித்த சந்தேகநபர்களின் தகவல்களிலிருந்து வட மத்திய மாகாணத்தில் பணிபுரியும் இரு இராணுவ அதிகாரிகளை விசாரிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
பிரபல ஊடகவியாலாளர் பிரகீத் எக்னலிகொட கடந்த 2014, ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டதாகக் கருதப்படுகின்றார். குறித்த காலப்பகுதியில் பல்வேறு நபர்கள் கடத்தப்பட்டிருந்தமையே இச்சந்தேகத்திற்கு காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...