பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை

 

திறைசேரிமுறி விநியோக சர்ச்சையில் தொடர்புபட்டுள்ள முதன்மை விநியோகஸ்தரான "பேர்ப்பச்சுவல் ட்ரெஷரி" நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

 நவம்பர் மாதம் 7ஆம் திகதி மற்றும் கடந்த 25 ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களிலும் குறித்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், சட்டச்சிக்கல்கள் காரணமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை பகிரங்கப்படுத்த முடியாதென்றும் அவர் கூறினார்.

மத்திய வங்கியில் நேற்று(29) நடைபெற்ற மாதாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மத்திய வங்கியால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது எதிர்வரும் தினங்களில் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க கடன் பத்திரங்கள் வழங்கப்படும்போது மத்திய வங்கி கடைப்பிடிக்கும் முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து, வெளிப்படைத் தன்மையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

திறைசேரி முறிகள் குறித்த ஏலம் நடத்தப்படுவதற்கு முன்னர் முதன்மை விநியோகஸ்தர்கள் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டமொன்று நடத்தப்பட்டு, வழங்கப்படவிருக்கும் திறைசேரி முறிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட சகல விடயங்களையும் தெரியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் சென்று திறைசேரி முறிகளை ஏலத்தில் வழங்குவதில்லையென தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன், திறைசேரி முறி ஏலம் தொடர்பான விடயங்களை கையாளும் அலுவலகத்தின் செயற்பாடுகள் சீ.சீ.ரி.வி கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 'புளூம்பேர்க்' தளத்தைக் கொண்ட இலத்திரனியல் ஏல முறை பயன்படுத்தப்படவுள்ளது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

திறைசேரி முறி விநியோக செயற்பாடுகளை கையாளும் பொதுப் படுகடன் திணைக்கள அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கையடக்கத்தொலை பேசிகளையே பயன்படுத்த வேண்டும்.

அது மாத்திரமன்றி திறைசேரி முறி ஏலம் குறித்த ஒழுங்குவிதிகள் மாற்றியமைக்கப்படவுள்ளன. இவற்றின் ஊடாக வெளிப்படையான ஏல செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத்

  

 


Add new comment

Or log in with...