மருந்துகளின் விலைகள் 85 வீதத்தால் வீழ்ச்சி

 

மருந்துப் பொருட்களின் விலைகள் அடுத்துவரும் இரு வாரங்களில் 85 வீதம் குறைவடையும் என்று சுகாதாரம் போஷாக்கு மற்றும் உண்ணாட்டு வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

மருந்துப் பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேசிய மருந்து பொருள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை வெளியிட்டதும் மருந்து பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மருந்து பொருட்களின் விலையை 85 வீதம் குறைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இன்று (31) வெளியிடுவதாக தேசிய மருந்து பொருள் அதிகார சபை ஏற்கனவே அமைச்சருக்கு அறிவித்திருந்தது. இருப்பினும் சில தொழில்நுட்ப பிரச்சினைகளைக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளதால் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு இரு வார கால அவகாசம் தேவைப்படுவதாக தேசிய மருந்து பொருள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அமைச்சருக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில்: 'நான் மருந்து பொருட்கள் மாபியாவுடன் போராடுகின்றேன். மருந்து பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் போதும் கூட அதற்கும் தடங்கல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. குறிப்பாக புற்று நோய்க்கு வழங்கப்படுகின்ற மருந்து பொருட்களில் ஒன்று அதி விலை கூடியது. அந்த மருந்துபொருளுக்கான மாற்று மருந்து பொருள் ரஷ்யாவிலிருந்து தருவிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

இருப்பினும் மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் ஆறு மருத்துவ நிபுணர்கள் அம்மரு-ந்துப் பொருளைச் சிபாரிசு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்வதாகத் தெரிய வருகின்றது. இது குறித்து இந்த மருத்துவ நிபுணர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளன. ஆனால் நாட்டிலுள்ள பொதுவைத்தியசாலைகளிலும் போதனா வைத்தியசாலைகளிலுமுள்ள புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவுகளில் ரஷ்யாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள குறித்த மருந்து பொருள் தொடராக வழங்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மர்லின் மரிக்கார் 


Add new comment

Or log in with...