மான், கா.பன்றி இறைச்சியை வைத்திருந்த 8 பேர் கைது

 

சிலாபம் தோட்ட கம்பனிக்குரிய தோட்டம் ஒன்றில் வைத்து கொல்லப்பட்ட மான் இறைச்சியைத் தம்வசம் வைத்திருந்தமை, சமைத்த மான் மற்றும் காட்டுப் பன்றியின் இறைச்சியைத் தம் வசம் வைத்திருந்துமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 08 பேர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் தோட்ட அதிகாரி ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவித்த வனவிலங்கு அதிகாரி, குற்றத்தை ஒப்புக் கொண்ட குறித்த நபருக்கு புத்தளம் மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா ரூபா 50,000 அபராதம் விதித்துள்ளதாக தெரிவித்தார்.

ஏனைய ஏழு பேரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிலாபம் தோட்டக் கம்பனிக்குரிய மங்கள எலிய சாந்த ஜோன் தோட்டத்தின் ஏ பிரிவின் தோட்ட அதிகாரி ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தை ஏற்றுக் கொள்ளாத நான்கு சிவில் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், குறித்த தோட்டத்தின் ஏ மற்றும் பீ பிரிவின் இரு காவலாளிகள் மற்றும் பீ பிரிவின் ஒரு தோட்ட அதிகாரி ஆகியோரை, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சுமார் 700 ஏக்கர் பரபபளவைக் கொண்ட குறித்த தோட்டத்தில் உள்ள காட்டினுள் மான்கள், காட்டுப் பன்றிகளைப் பிடித்து கொலை செய்து இறைச்சியாக்கும் மோசடி நீண்ட காலமாகவே இடம்பெற்று வருவதாக ஆனவிழுந்தாவ பாதுகாப்பு வனாந்தரத்திற்குப் பொறுப்பான வனப்பாதுகாப்பு அதிகாரிக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து புத்தளம் மாவட்டத்திற்குப் பொறுப்பான வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் டப்ளியூ.என்.கே.எஸ். சந்திரரத்னவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(புத்தளம் விஷேட  நிருபர் - எம். எஸ். முஸப்பிர்)

 


Add new comment

Or log in with...