பாராளுமன்ற உள்ளிருப்பு பயிற்சியை ஆரம்பித்துள்ள இலங்கை பாராளுமன்றம்

கொள்கைத் தயாரிப்பு மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பில் நடைமுறை அனுபவம் கொண்ட மாணவர்கள் மற்றும் இளம் தொழில்வல்லுனர்களை உருவாக்கும் நோக்கில் இலங்கைப் பாராளுமன்றம் தேசிய ஜனநாயக நிறுவகம் (NDI) மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் (USAID)  ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பாராளுமன்ற உள்ளிருப்பு பயிற்சியை ஆரம்பித்துள்ளது.

இந்த நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் மார்ச் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே.ஜயதிலக, தேசிய ஜனநாயக நிறுவகத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் துசிதா பிலபிட்டிய உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். அங்குரார்ப்பண நிகழ்வில் சபாநாயகர் சிறப்புரை ஆற்றினார்.

இலங்கையிலுள்ள அனைத்து தேசியப் பல்கலைக்கழகங்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பையடுத்து, அதற்குப் பதிலளித்த எட்டு பல்கலைக்கழகங்களில் இருந்து பயிற்சியாளர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கமைய கொழும்பு, ஸ்ரீஜயவர்த்தனபுர, களனி, பேராதனை, ரஜரட்டை, யாழ்ப்பாணம், றுகுனு மற்றும் சப்ரகமுவ ஆகிய அரச பல்கலைக்கழகங்களிலிருந்து 35 மாணவர்கள் இந்த உள்ளிருப்பு பயிற்சிக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த உள்ளிருப்பு பயிற்சித் திட்டத்தின் விடயங்கள் குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) இலங்கை பாராளுமன்றத்துடன் இணைந்து இவர்களுக்கு மூன்று நாள் வதிவிட செயலமர்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. சட்டவாக்க செயன்முறை, பாராளுமன்றத்துடன் ஈடுபாடுகளை மேற்கொள்வதற்கான வழிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த அமர்வுகள் இங்கு இடம்பெற்றன. பாராளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் இது தொடர்பான விரிவுரைகளை முன்வைத்ததுடன், நிகழ்ச்சியின் இறுதியில் நடைபெற்ற திறந்த கலந்துரையாடலில் மாணவர்களுக்குத் தங்களின் கேள்விகளை முன்வைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்த மூன்று நாள் செயலமர்வின் பின்னர், பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பயிற்சியாளர்கள் ஒதுக்கப்பட்டதுடன், பயிற்சிக் காலத்தில், இலங்கை பாராளுமன்றத்தில் நடைமுறை அறிவையும் அனுபவத்தையும் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

இந்த உள்ளிருப்பு பயிற்சித் திட்டத்தின் உள்ளடக்கத்தில் பல்வேறு தொழில் பாதைகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை அடங்கியுள்ளன. இது பாராளுமன்றத்திற்கும் இளைஞர்களுக்கும் இடையிலான உறவையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்துதல், ஜனநாயகத்தை மேம்படுத்துதல், இலங்கை பாராளுமன்றம் பற்றி இளைஞர்களை அறிவூட்டல் மற்றும் 'திறந்த பாராளுமன்றம்' என்ற எண்ணக்கருவை மேம்படுத்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டமைந்துள்ளது.


Add new comment

Or log in with...