ட்விட்டரை வாங்கியுள்ளதாக மஸ்க் அறிவிப்பு

- உயர் பதவிகளில் இருந்த பல இந்தியர்கள் பணி நீக்கம்

உலகின் பெரும் செல்வந்தரான எலன் மஸ்க் ட்விட்டர் தளத்தை கொள்வனவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் கணக்கில் "the bird is freed" (பறவை சுதந்திரமளிக்கப்பட்டுள்ளது) என பதிவொன்றை இட்டுள்ளார்.

 

 

இது ட்விட்டர் இலச்சினையிலுள்ள பறவையை குறிப்பதாகவும், இங்கு காணப்பட்ட இறுக்கங்கள் தளர்த்தப்பட்டுள்ளது எனும் கருத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

51 வயதான எலோன் மஸ்க், ட்விட்டர் தலைமையகத்தில் கைகழுவும் தொட்டி (wash basin/ sink) ஒன்றை சுமந்து செல்லும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். ட்விட்டரை அவர் வாங்கும் திட்டம் முன்னெடுக்க வாய்ப்பு உள்ளதை இது காட்டுவதாகக் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 

SpaceX நிறுவன உரிமையாளரும், அதன் பிரதம நிறைவேற்று அதிகரியும், மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla) நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியுமான (CEO) எலன் மஸ்க், 44 பில்லியன் டொலருக்கு ட்விட்டரை வாங்குவதை பூர்த்தி செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (28) நிறைவடைந்திருந்தது.

இந்த அறிவிப்பு பல மாதங்களுக்கு முன் வெளியானபோதும் அதனை கைவிட மஸ்க் முயன்றார். இது பற்றிய வழக்கு விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னர் ட்விட்டரை வாங்கும் திட்டத்தை முன்னெடுக்க மஸ்க் இந்த மாத ஆரம்பத்தில் இணங்கி இருந்தார்.

இந்நிலையில் ஒப்பந்தம் சரிவர அமைகிறது என்பதற்கு அடையாளமாக மஸ்க் அவரது ட்விட்டர் கணக்கில் ‘தலைமை ட்விட்டர் பயனர்’ (Chief Twit) என்ற தலைப்பை சேர்த்துக்கொண்டு அதனுடன் அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தில் நடந்துசெல்லும் வீடியோவை இணைத்திருந்தார்.

இதற்கிடையே மஸ்க் வசம் ட்விட்டர் சென்றவுடன் அவர் 75 வீத ஊழியர்களை பணி நீக்கம் செய்வார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என்று ட்விட்டர் ஊழியர்களுக்கு மஸ்க்கே விளக்கமளித்திருந்தார்.

ஆனாலும் ட்விட்டரை கையகப்படுத்திய பின்னர் சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் நிச்சயமாக மஸ்க் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதால் ஊழியர்கள் அழுத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ட்விட்டர் பிரதம அதிகாரியாக (Chief Executive) உள்ள பராக் அகர்வால் (Parag Agrawal), பிரதம நிதி அதிகாரி (Chief Financial Officer) நெட் செகல் (Ned Segal) மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் கொள்கைத் தலைவர் (Legal Affairs and Policy Chief) விஜயா கட்டே (Vijaya Gadde) ஆகியோரை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் சமூக ஊடக தளத்தில் போலி கணக்குகளின் எண்ணிக்கையில் தன்னையும் ட்விட்டர் முதலீட்டாளர்களையும் தவறாக வழிநடத்தியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகர்வால் மற்றும் செகல் ஆகியோர் ட்விட்டரின் சென் பிரான்சிஸ்கோ தலைமையகத்தில் இருந்த நிலையில், அவர்களை இவ்வாறு பணிநீக்கி வெளியே அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் ட்விட்டர் நிறுவனமோ, மஸ்க் அல்லது அதன் நிர்வாகிகளே கருத்து வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ட்விட்டர் நிறுவனத்தில் சமனிலைத் தன்மை இல்லை.. போதிய கருத்து சுதந்திரம் இல்லை. நாம் வேண்டுமானால் ஒரு சமூகவலைத்தளத்தை தொடங்குவோமா? வேண்டாம் நாமே ட்விட்டர் நிறுவனத்தை ஏன் வாங்கிவிட கூடாது என்று எலான் மஸ்க் விளையாட்டாக கேட்டதுதான் இந்த நிறுவனம் கை மாற முக்கிய காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் கொஞ்சமாக பங்குகளை வாங்கி தற்போது ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக மஸ்க் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். முதலில் 5 சதவிகித பங்குகளை வைத்து இருந்தவர் அதன்பின் கடந்த சில தினங்களுக்கு முன் தனது பங்குகளை 9.2 என்ற அளவிற்கு உயர்த்தினார். இதன் மூலம் அந்த நிறுவனத்தில் அதிக பங்கு கொண்டு இருக்கும் தனி நபராக மஸ்க் உருவெடுத்தார்.


Add new comment

Or log in with...