என் உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன்

பிணையில் வெளிவந்த பிள்ளையான் தெரிவிப்பு

மக்களோடு மக்களாக நின்று என்னுடைய உயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் என விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கடந்த ஐந்து வருடங்களாக சிறையிலிருந்த விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் அவரது சாகாக்களும் நேற்று செவ்வாய்கிழமை (24) பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய பின்னர், ஊடகங்களுக்கு தனது விடுதலை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

என்னுடைய வழக்கு திட்டமிட்ட ஒரு பழிவாங்கல். அதை இன்றுதான் நீதிமன்றம் உணர்ந்திருக்கின்றது. ஏற்கனவே நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் போல மக்களோடு மக்களாக நின்று என்னுடைய உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன். என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு மாத்திரமன்றி என்னை நம்பி நான் வெளியில் வர வேண்டுமென பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என தெரிவித்தார்.

இவ்வழக்கில் செவ்வாய்க்கிழமை ஆஜராகிய யாழ். மாவட்ட பாராராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பற்றி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதும் உங்களுக்கு சுமந்திரன் யார் எனத் தெரியும்.

அவர் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், நான் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். அவருக்கு கிடைத்த வாக்குகள் என்ன? எனக்கு கிடைத்த வாக்குகள் என்ன? அவருடைய வாதம் என்னவென்றால் பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஆகவே அவரை வெளியில் விடக்கூடாது என்பது. அப்படியாயின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவிகளும் விடுதலை செய்யப்படாத ஒரு நிலையே உருவாகும். ஆகவே அவரது வாதத்தை வேடிக்கையான ஒரு விடயமாகவே நான் பார்க்கிறேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...