நிரூபித்தால் 24 மணித்தியாலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்குவேன்

ஊடகவியாலாளர்களுக்கு எதிராக நான் பொலிசில் முறைப்பாடு செய்ததை நிரூபித்தால் 24 மணித்தியாலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை, மைலத்தமடு காணிப்பிரச்சனை தொடர்பில் பண்ணையாளர்கள் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடவியலாளர்களை நான் பொலிசில் முறைப்பபடு செய்ததாக சிலர் தெரிவித்திருந்தார்கள், அதுதொடர்பில் சில இணையத்தளங்களிலும் கருத்துக்கள் வெளிவந்திருந்தன.

எந்த ஊடகவியலாளர் தொடர்பாகவும் நான் இலங்கையிலுள்ள எந்தப் பொலிஸ் நிலையத்திலாவது முறைப்பாடு செய்திருந்தால், அல்லது வாயால் சொல்லியிருந்தாலும், அதனை யாராவது நிரூபித்தால், 24 மணித்தியாலத்தில் நான் என்னுடைய அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒதுங்குவேன் என்பதை நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன். இதனை அவ்வாறு தெரிவித்தவர்கள், நிரூபிக்க வில்லையாயின் அவர்களுக்கு ரோசம் இருந்தால், அவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டும்.

இவ்வாறு  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள் அவரது காரியாலயத்தில் திங்கட்கிழமை (23) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு தொடர்பில் என்மீதும் எனது வாகரைப் பிரதேச இணைப்பாளர் மீதும் அவதூறாக இருட்டில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை போலி முகப்பு புத்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோவில் கருத்துத் தெரிவித்த நபரை எமது இணைப்பாளர் நேரில் சந்தித்து வெளிச்சத்தில வைத்து வினவியபோது அவரை யாரோ ஒருவர் இருட்டில் வைத்து கேள்வி கேட்டதாகவும் அவர் அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கவில்லை எனவும், குறித்த நபர் தெரிவித்துள்ளார். போலி முகமூடிகள், போலி முகப் புத்தகத்தை நடாத்துகின்றவர்கள்தான் இவ்வாறு எம்மீது அவதூறு செய்து வருகின்றார்கள். இவ்விடயம் குறித்து எனது வாகரைப் பிரதேச இணைப்பாளர் அமலன் வாகரைப் பொலிஸ் நிலையத்தில முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டுக்கு அமையாக குறித்த வீடியோவில் கருத்துத் தெரிவித்த நபர் பொலிசாரால் வரவழைக்கப்பட்டு வாக்குமூலம் தெரிவித்துள்ளார். அதிலே ராஜன் என்பவர் அவரை இருட்டிலே அழைத்து அவருடைய மனைவியின் மருத்துவச் செலவுக்காக பணம் தருவதாகத் தெரிவித்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனைப் பற்றி பிழையாகக் கூறும்படி கேட்டுக் கொண்டதாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இவ்விடயத்தை நாம் நீதிமன்றம்வரைக் கொண்டு செல்லவுள்ளோம்.

நான் பிழை விட்டிருந்தல் அதனை நான் ஏற்கத் தயார். ஆனால் போலி நாடகம் ஆடுபவர்கள், எந்தப் பின்புலத்தில் இருந்தாலும், வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதனை நாம் இனிமேலும் அனுமதிக்க முடியாது.

அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்ச்சிதான் எம்மைப்பற்றி இவ்வாறு போலி முகப்புத்தகங்களில் எழுதுகின்றார்கள். எம்மீது குற்றங்கள், இருந்தால் நேரடியாகப்பேசுவதற்கு நாம் தயார். எப்போதும், உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது. இன்னும் பல போலி முகங்கள் வெளிச்சத்திற்கு வரும்.

ஊடகவியலாளர்கள் பாதிக்கப்படும்போது களத்திலிறங்கி நாடாளுமன்றம் வரைக்கும் குரல் கொடுத்தவன் நான். மாதவனை, மைலத்தமடு காணிப்பிரச்சனை தொடர்பில் பண்ணையாளர்கள் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடவியலாளர்களை நான் பொலிசில் முறைப்பாடு செய்ததாக சிலர் தெரிவித்திருந்தார்கள், அதுதொடர்பல் சில கருத்துக்கள் இணையத்தளங்களிலும் வெளி வந்திருந்தன. எந்த ஊடகவியலாளர் தொடர்பாகவும் நான் இலங்கையிலுள்ள எந்தப் பொலிஸ் நிலையத்திலாவது முறைப்பாடு செய்திருந்தால், அல்லது வாயால் சொல்லியிருந்தாலும், அதனை யாராவது நிரூபித்தால், 24 மணித்தியாலத்தில் நான் என்னுடைய அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒதுங்குவேன். இதை நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன் என்றார்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)  


Add new comment

Or log in with...