தேயிலை ஏற்றுமதி வரி 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம்

தேயிலை ஏற்றுமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரியை 06 மாதங்களுக்கு  தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (18) முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்தார்.

தற்போது நாட்டில் நிலவும் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக, தேயிலை தொழிற்றுறை பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளன.

அதில், தேயிலை தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுதல், தேயிலை இறக்குமதி செய்யும் பெரும்பாலான  நாடுகளில் கொள்வனவு ஒப்பீட்டளவில் குறைதல்,  விநியோக முகாமைத்துவத்திலான சிக்கல்கள், உற்பத்தியின் தரத்தை பேணுதல் ஆகியன முக்கிய சவால்களாகும்  என, அவர் சுட்டிக்காட்டினார்.

இச்சிரமங்களுக்கு மத்தியில் தேயிலை தொழிற்றுறையை நிலையாக பேணி முன்னெடுத்துச் செல்லும் வகையிலான  நிதியியல் நிவாரணமாக, பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களிடம் தற்போது அறவிடப்படும் கிலோ கிராமிற்கான 3.50 ரூபாய் தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரி, 06 மாதங்களுக்கு  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...