எயார்பஸ் முறைகேடு; ஸ்ரீ லங்கனுக்கு 19ஆம் திகதி COPE குழுவுக்கு அழைப்பு

எயார்பஸ் முறைகேடு; ஸ்ரீ லங்கனுக்கு 19ஆம் திகதி COPE குழுவுக்கு அழைப்பு-SriLankana Airlines Summoned to CoPE Committee

ஸ்ரீ லங்கனின் கால அவகாச கோரிக்கை நிராகரிப்பு
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பெப். 18 அழைப்பு
- இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பெப். 20 அழைப்பு

கடந்த சில நாட்களாக விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை எதிர்வரும் 19ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) அழைத்திருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

அது தவிர எதிர்வரும் 18ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும், 20ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கும் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆகியவற்றை பாராளுமன்ற அமர்வுகள் முடிவடையும்போது அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ{க்கு தாம் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் என்பதால் குறித்த விடயம் பற்றி ஆராய்வதற்கு கால அவகாசம் தேவையென்றும், விசாரணைக்கு பிறிதொரு தினத்தை வழங்குமாறும் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் அதிகாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
எனினும் இந்தக் கோரிக்கையை நிராகரித்ததுடன், அன்றையதினமே (19) குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறும் வலியுறுத்தியதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

இதற்கு முன்னர் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் குறித்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், இது தொடர்பில் இரண்டு அறிக்கைகள் இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...