மெத்திவ்ஸ் அபார சதம் வலுவான நிலையில் இலங்கை

சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸின் அபார சதத்துடன் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 400 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடியது.இலங்கை அணி சார்பாக மெத்திவ்ஸ் 135 ஓட்டங்களுடனும்

விக்கெட் காப்பாளர் நிரோசன் திக்வெல்ல 32 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.இலங்கை அணியின் நேற்றைய நாள் ஆட்டத்தில் தனஞ்சய டி சில்வா 63 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.அவரது விக்கெட்டை ந்யோச்சி கைப்பற்றினார்.

இச் செய்தி அச்சுக்கு போகும் வரையான தகவலே இவை.

முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களைப் பெற்றது.

சிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, தமது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களான மஸ்வரே, கஷூஸா, ஏர்வின் ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இலங்கைப் பந்துவீச்சில் எம்புல்தெனிய 05 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 03 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

களத்தில், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 12 ஓட்டங்களோடும், குசல் மெண்டிஸ் 6 ஓட்டங்களோடும் ஆட்டமிழக்காது காணப்பட்டிருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன சிறந்த தொடக்கம் ஒன்றினை வழங்கிய நிலையில் ஆட்டமிழந்தார்.

அறிமுக வேகப்பந்துவீச்சாளர் விக்டோர் ந்யோச்சியின் கன்னி டெஸ்ட் விக்கெட்டாக மாறிய திமுத் கருணாரத்ன 37 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் குசல் மெண்டிஸ், புதிய துடுப்பாட்ட வீரராக களம் வந்த அஞ்சலோ மெத்தியூஸூடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கினார்.

இந்நிலையில், தனது 11 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்த குசல் மெண்டிஸ் 8 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஆடுகளம் நுழைந்த தினேஷ் சந்திமால் பெரியளவில் பிரகாசிக்கத் தவறினார். எனினும், மத்திய வரிசையில் களம் வந்த தனஞ்சய டி சில்வா பொறுமையான முறையில் துடுப்பாடி அஞ்சலோ மெத்திவ்ஸ் உடன் இணைந்து இலங்கை அணியினைப் பலப்படுத்தினார்.

மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது, இலங்கை அணி 106 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 4 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

அஞ்சலோ மெத்தியூஸ் தனது 35 ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 92 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் உள்ளார். இதேநேரம், தனஞ்சய டி சில்வா 42 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சு சார்பில் திறமையினை வெளிப்படுத்திய விக்டர் ந்யோச்சி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க, சிம்பாப்வே அணித்தலைவர் சோன் வில்லியம்ஸ் மற்றும் டொனால்ட் ட்ரிபானோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் எடுத்திருந்தனர்.


Add new comment

Or log in with...