தமிழ் கட்சிகள் இணைந்து பெரும் பலமான ஒரு அணியை உருவாக்க வேண்டும்

20வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ஆகியோர் தமிழ் மக்களின் நலனுக்காக மீண்டும் இணைய முடியுமானால் ஏன் தற்போது அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய முடியாது? எனவே அனைத்து தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் ஒரு பலமான அணியை உருவாக்குங்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார். 

யாழ். ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழரசுக் கட்சியின் தலைவர் என கூறிக்கொண்டு திரியும் மாவை சேனாதிராஜா அமிர்தலிங்கத்தின் இடத்திற்கு தான் வரவேண்டும் என முண்டியடித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் செயற்பட்டது மாபெரும் தவறு 

அமிர்தநாயகம் உயிரோட இருக்கும் வரையில் மாவை கட்சியின் ஊழியன். சம்பளம் வாங்கி வேலை செய்தவர். பிறகு அமிர்தலிங்கத்தின் ஆசனத்தை கேட்டு சண்டை பிடித்தவர்.  

தந்தையின் ஆசனத்தை தனக்கு தருமாறு கோரிய போது கொள்கை அடிப்படையில் அதனை நாம் வழங்க மறுத்த போது, எம்முடன் முரண்பட்டு தனித்து போட்டியிட்டவர் குமார் பொன்னம்பலம்.  

மக்கள் சேவை என வந்த நான் அப்புக்காத்தர் வேலை செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இன்றைக்கு கிளிநொச்சியில் காணி உறுதி எழுதியே கோடீஸ்வரன் ஆகியிருப்பேன். 

மகேஸ்வரன் , ரவிராஜ் , லக்‌ஷமன் கதிர்காமர் என 500க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் சமஷ்டியை முன்வைக்க, மஹிந்த ஒற்றையாட்சியை முன்வைத்தார். அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தார்கள். அப்படியிருக்கையில் சமஷ்டி கோரிக்கையை 49வீத சிங்களவர்கள் ஏற்றே ரணிலுக்கு வாக்களித்தனர்.  சம்பந்தன், மாவை, சுமந்திரனை தவிர மிகுதி அரசியல் தலைவர்கள் கூட்டணிக்கு வாருங்கள். அவர்கள் மூவரும் அரசியலில் இருந்து விலகுவது தமிழ் மக்களுக்கு செய்யும் பெரிய உதவி. இல்லாவிடின் மக்கள் அவர்களை அரசியலில் இருந்து அகற்றுவார்கள்.  

புலிகளின் ஏக பிரதிநிதி என கூறி நாடாளுமன்றம் சென்றவர்களை சந்திரிக்கா துரத்தியிருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரால் எப்படி நாடாளுமன்றம் செல்ல முடிந்தது ? 

கள்ள வோட்டில் நாடாளுமன்ற போனோம் என்ற குற்ற உணர்ச்சி சற்றும் இல்லாம இன்று ஜனநாயகம் பேசுகின்றார்கள். 

பிரதமர் மஹிந்த என்னிடம் கோரினார், சமஷ்டி என பேச வேண்டாம் ‘இந்திய மொடல்’ என கேளுங்கள் என்றார். என்னுடைய ‘இந்திய மொடல்’ எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.   

பருத்தித்துறை விசேட நிருபர்


Add new comment

Or log in with...