வெள்ளம், அறக்கொட்டி தாக்கம்; அறுவடைக்கு தயாராகிய பல ஏக்கர் வயல்கள் பாதிப்பு | தினகரன்


வெள்ளம், அறக்கொட்டி தாக்கம்; அறுவடைக்கு தயாராகிய பல ஏக்கர் வயல்கள் பாதிப்பு

நட்ட ஈட்டை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாகவும், அறக்கொட்டி நோய் தாக்கத்தினாலும் அறுவடைக்கு தயாராகவிருந்த நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள சுமார் 20ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெல் வயல்கள் பெய்து வரும் மழை வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

இது தவிர நெல்லில் ஏற்பட்டுள்ள அறக்கொட்டி உள்ளிட்ட நோய் காரணமாகவும் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லினை விற்பனை செய்வதில் தளம்பல் நிலை காணப்படுவதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விவசாயிகள் குறிப்பிடுகையில், மிகவும் சிரமத்தின் மத்தியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை தனியார் மில் உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்ய முயற்சிக்கின்றனர். ஆகவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அறக்கொட்டி நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான களைநாசினிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். குறிப்பாக விவசாயத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்ட களை நாசினிக்கு கூட இந் நோய் தாக்கம் கட்டுபடவில்லை.

எனவே  விவசாயிகளின் எதிர்காலத்தை பாதுகாத்து கொடுப்பதுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டயீட்டை பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக இந் நோயானது மாவட்டத்தின் பனங்காடு, கண்டம், தோணிக்கல் உள்ளிட்ட பல பெரும்போக விவசாய கண்டங்களிலேயே ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் அறக்கொட்டிப்பூச்சியின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் விவசாயிகளினால் கைவிடப்பட்டுள்ளன.

இதேநேரம் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து காப்பாற்றப்பட்ட வயல்நிலங்கள் அறக்கொட்டி உள்ளிட்ட சில நோய்களாலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

சந்தையில் முறையான கிருமி நாசினிகளை மாத்திரம் விற்பனை செய்ய விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வாச்சிக்குடா விஷேட ,பனங்காடு தினகரன், ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்கள்


Add new comment

Or log in with...