மூச்சோடு உலாவிய பிரதி | தினகரன்


மூச்சோடு உலாவிய பிரதி

Silent Thoughts, Moments Of Merriment, Silent Struggle எனும் மூன்று படைப்புகள் இர்பானின் எழுத்துக்கள் சொல்லும் அடையாளம். இவையாவும் அவனது செயற்கை சுவாசத்துடன் எழுதப்பட்ட பொக்கிஷங்கள். எழுத்துக்களின் வெளிப்பாட்டு நியமங்கள் மிக விசித்தரமானவை. அவை பொருந்தியிருக்கும் நிலைப்பாட்டில் பெரும் கட்டுடைப்பினைச் செய்கின்றன. இப்படித்தான் இர்பானின் வாழ்வும் பிணைந்துள்ளது. இர்பானின் எழுத்து மொழியினை எப்படி எத்திவைப்பது என்று குழம்பிக் கொண்டிருக்கும் வெளிப்பாடகவே அவரது படைப்புகள் அமைந்திருக்கின்றன. இர்பானின் உணர்வுகள் எதனைப் பேச நினைக்கிறதோ அதனை சொற்களில் செய்து காட்டியிருக்கிறார். எவ்வாறு ஒரு கதை சொல்லியை அடையாளம் காணலாம், அவனுடைய எழுத்துக்களை கதைகளின் பக்கம் எவ்வாறு உள்வாங்கலாம், அவனுடைய கதைகளின் அரசியலினை எப்படி புரிந்து கொள்வது போன்ற ஏராளமான கேள்விகள் காத்திரமான வரலாற்றினை உருவாக்குகின்றன. நிலவிலிருந்தும், காற்றிலிருந்தும், தான் நுகர்கின்ற எல்லாப் பொருட்களின் மீதும் கதை சொல்லி கவனம் பெறத் துவங்குகிறான். அவைகளை கதைகளாக பிரகடனப்படுத்துகிறான். கதைகளின் பிறப்பு நிகழ்ந்ததன் பின்னர் வாசகனின் பார்வையும், உரையாடலும் கதை சொல்லிக்கான அங்கீகார இருப்பிடத்தினை வழங்குகிறது. இர்பானின் அங்கீகாரம் என்பது நிஜத்தினை அப்பி வைத்து முரண்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளாத போராட்ட வீரனின் அழகியலுக்கு ஒப்பானது. 

எழுத்தியக்கம் மேலோங்கிய சூழலில், அவ்வெழுத்துக்களின் அங்கீகார வெளிப்பாடாக இணையங்கள் ஆற்றிய பணி மிக முக்கியமானதாகும். அச்சு இயந்திரங்களின் வருகையானது மரபு ரீதியாக பண்பாட்டிலிருந்த ஏடுகளை புதிய நிலையியலுக்கு கொண்டு வந்தது போல, அச்சு இயந்திரங்களின் பண்பாட்டினை இணையங்கள் புதிய நிலையியலுக்கு கொண்டுவந்திருக்கின்றன. இர்பானின் வாழ்வும், எழுத்துலகமும் அவ்வாறே எமக்கெல்லாம் அறியப்பட்டது. எழுத்துக்களின் வெளிப்பாடுகளில் முகநூல் மிக முக்கியமான பங்குதாரி. இர்பானின் முகநூல் பத்திகளின் காத்திரம் அவனை ஒரு ஒப்பற்ற தளத்திற்கு கொண்டு சென்றது. இர்பானின் மன உணர்வுகள் எப்பொழுதும் விசாலமானவை, உலகில் இருக்கின்ற எல்லாவற்றையும் பதிவு செய்யக் கூடியவை. மரணத்தின் பெரும் வாசலிலிருந்து யாரால்தான் தப்பித்துவிட முடியும்? எல்லா உயிரினங்களும் மரணம் எனும் மையப்புள்ளியில் தனக்காக வாழ்வினை முடித்துக் கொள்கின்றன. மனிதனும் ஓடுகிறான், அவனுக்குப் பின்னால் மரணமும் ஓடுகிறது. வாழ்க்கையின் எச்சங்கள் முடிவாகும் இடத்தினில் லாவகமாய் மாட்டிக் கொள்கிறான் மனிதன். அவ்விடத்தில் மாத்திரமே மனிதனைத் தாண்டி மரணம் வெற்றி கொள்கிறது. இப்படித்தான் மரணம் வென்ற கதையில் இர்பான் ஹாபிஸூம் சிக்கிக் கொண்டான். அவனுக்கான மரணம் அவனின் விடுதலையாகக் கூட இருக்கலாம். பலருக்கும் மரணம் விடுதலையாகவே இருந்திருக்கிறது.   


Add new comment

Or log in with...