அமெரிக்க மில்லேனியம் சேலஞ்ச் உடன்படிக்கையில் அரசு கைச்சாத்திடாது

அமெரிக்க மில்லேனியம் சேலஞ்ச் உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட மாட்டாதென அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அதேவேளை இலங்கை- சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு  பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

மேற்படி விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இக்கருத்துக்களை வெளியிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று 52 நாட்களே கடந்துள்ளன. 52 நாட்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற முடியாது. எனினும் நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவோம். 

நாலரை வருடங்கள் ஆட்சியில் இருந்து நன்றாக நித்திரை செய்து விட்டு தேர்தல் காலத்தில் விழித்துக் கொண்டு மக்களுக்கு பொய் வாக்குறுதி வழங்கியவர்கள், கடைசி நேரத்தில் ஆதரவாளர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கியவர்கள் இப்போது அரசாங்கத்தை குறை கூறுகின்றனர்.  

பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சபையில் கூக்குரல் இடுகின்றனர். உண்மையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அது விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு சிறந்த தீர்வைப் பெற்றுக் கொடுக்கும். எனினும் எதிர்க்கட்சிகளுக்கு அது தொடர்பில் பேச எந்த அருகதையும்  கிடையாது. எதிர்க்கட்சியினர் ஆட்சியிலிருந்த காலத்தில் நீதிமன்றத்தை எவ்வாறு உபயோகித்தனர் என்பதை சகலரும் அறிவர். பிணை முறி மோசடி தொடர்பில் சட்டமா அதிபர் அறிக்கை தயாரித்துள்ளார். அதன்மூலம் அவர்களது மோசடி வெளிப்படும். நீதித்துறை,பொலிஸ்துறை என்பவற்றை கடந்த அரசாங்கம் சீரழித்துள்ளது. அவற்றை மீள முறையாக கட்டமைக்க வேண்டியுள்ளது. ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா என்பதை நான் கேட்க விரும்புன்றேன்.  

அன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ மஹிந்தானந்த போன்றோரை கைது செய்தபோது பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது அவர்களது பிரதிநிதிகளை கைது செய்யும்போது பழிவாங்கல் என கூறுகின்றனர். 

நாம் நீதித்துறையில் அழுத்தம் செலுத்தியிருந்தால் சம்பிக்க ரணவக்க எம்பி வெளியே வந்திருக்க முடியாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். 

கடந்த அரசாங்கம் நீதிமன்றத்தினதும் பொலிஸ் துறையினதும் கௌரவத்தை இல்லாதொழித்துள்ளது. 

பிணைமுறி மோசடி தொடர்பில் எதிர்க்கட்சியினர் சபையில் தெரிவித்தனர். நாம் பிணைமுறியை விற்கவில்லை என்பதை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்   


Add new comment

Or log in with...