மஹிந்திரா டிராக்டர்களுக்கு விசேட லீசிங் வசதிகள் | தினகரன்

மஹிந்திரா டிராக்டர்களுக்கு விசேட லீசிங் வசதிகள்

 SDB, DIMO ஆகியன உடன்படிக்கையில் கிராமிய மட்டத்தில் உறுதியான பங்களிப்பை வழங்கி வரும், இலங்கையின் முன்னணி நிதிச் சேவைகளை வழங்கும் வங்கியான SDB வங்கி, DIMO உடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், மஹிந்திரா டிராக்டர் வகைகளுக்கு விசேட லீசிங் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளது.

விவசாயத் துறை மற்றும் சிறு அளவில் இயங்கும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த லீசிங் திட்டம் அமைந்துள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்குமிடையிலான இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடும் நிகழ்வு DIMO தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

வங்கியின் சார்பாக SDB வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலக் பியதிகம மற்றும் DIMO சார்பாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏ.ஜி.பண்டிதகே ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

2x4 மற்றும் 4x4 ஆகிய இரு வகையான டிராக்டர் தெரிவுகளுக்கும் இந்த விசேட லீசிங் வசதிகள் வழங்கப்படும். SDB வங்கி மற்றும் DIMO ஆகியவற்றுக்கிடையிலான இந்த உடன்படிக்கையின் பிரகாரம், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இதில், டிராக்டரின் பெறுமதியில் 85 சதவீதம் வரை லீசிங் வசதியை பெறல் போன்ற சந்தையில் வழமையாக காணப்படாத சலுகை மற்றும் மாதாந்தம் அல்லது பருவ கால அடிப்படையில் மீளக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதி போன்ற கிராமிய விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

5 வருடங்கள் வரை அல்லது 10 பருவகால கொடுப்பனவுகள் வரை மீளச் செலுத்தக்கூடியதாக இந்த லீசிங் வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.


Add new comment

Or log in with...