ரபேல் விமான ஒப்பந்தம் செல்லுபடியாகுமென உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு | தினகரன்


ரபேல் விமான ஒப்பந்தம் செல்லுபடியாகுமென உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58,000 கோடியில் 36 ரபேல் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீடு இருந்ததாகவும், முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

இதனிடையே, இந்த ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி வழக்குரைஞர்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று தீர்ப்பளித்து, அந்த மனுக்களை கடந்த டிசம்பர் 14-ஆம் திகதி தள்ளுபடி செய்து விட்டது.

இந்த தீப்பை மறுஆய்வு செய்யக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சௌரி, மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், வழக்குரைஞர் வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகிய 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரபேல் ஒப்பந்தம் செல்லும் என்பதை உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உறுதி செய்துள்ளது. மேலும் ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்பதற்கு எதிராக தொடரப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...