நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஜனாதிபதித் தேர்தலே தீர்வாக முடியும் | தினகரன்


நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஜனாதிபதித் தேர்தலே தீர்வாக முடியும்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் - மோசடிகள் என அனைத்துக்கும் தீர்வு ஜனாதிபதித் தேர்தலே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது.  

ஜனாதிபதித் தேர்தலில் மாற்று வேட்பாளர்கள் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றால் கட்டாயம் இரண்டாம் விருப்பு வாக்கு முறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அக்கட்சி தெரிவித்தது.  

 சு.கவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,   நிலக்கரியை டென்டர் இல்லாது நேரடியாக இறக்குமதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் ஊழல் - மோசடிகளுக்கு வழிவகுக்கக் கூடியவையாகும்.  

அமைச்சர் அர்ஜுண ரணதுங்க பெற்றோலிய வள அமைச்சராகவிருந்த காலத்தில் பெற்றோலை வழமையான முறைக்கு மாறான டென்டர் முறையில் இறக்குமதி செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டது. அச் செயற்பாடு ஊழல் - மோசடிக்கே வழிவகுத்தது.  

அதேபோன்று விவசாய திணைக்களத்துக்காக குத்தகைக்கு கட்டிடம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டுக்குப் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஹோட்டல்களும், நிறுவனங்களும் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன.   தேசியவாதத் தலைவரே நாட்டுக்குத் தேவை. கடுமையான இனவாதத்திற்கும், புதிய லிபரல் வாதத்திற்கும் நாம் எதிரானவர்கள்.  மிகவும் கடினமான பயணமொன்றை பயணிக்க வேண்டியுள்ளது. இவை அனைத்துக்கும் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள கூடிய வழியாக ஜனாதிபதித் தேர்தலே காணப்படுகிறது என்றார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்  


Add new comment

Or log in with...