பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி சம்பியன் | தினகரன்


பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி சம்பியன்

இளையோர் ஆசிய கிண்ணம்:

19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றது.

இலங்கையில் நடைபெற்ற இந்தத் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டி ஆர்.பிரேமதாச அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 32.4 ஓவரில் 106 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அணித்தலைவர் துருவ் ஜுரல் 33, ஷாஸ்வத் ராவத் 19, கரண் லால் 37 ஓட்டங்கள் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அணிவகுத்தனர்.

அடுத்து 50 ஓவரில் 107 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணி அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் 33 ஓவரில் 101 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அணித்தலைவர் அக்பர் அலி 23, மிருன்ஜாய் 21, ஹசன் ஷாகிப் 12, ரகிபுல் ஹசன் ஆட்டமிழக்காது 11 ஓட்டங்களை எடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதர்வா அங்கோலேகர் 5 விக்கெட் கைப்பற்றினார். ஆகாஷ் சிங் 3, வித்யாதர், சுஷாந்த் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதர்வா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


Add new comment

Or log in with...