சோளக்காட்டில் தரையிறங்கிய ரஷ்ய விமானம் (VIDEO) | தினகரன்


சோளக்காட்டில் தரையிறங்கிய ரஷ்ய விமானம் (VIDEO)

மொஸ்கோவிலிருந்து புறப்பட்ட ரஷ்ய விமானத்தின் இரண்டு எஞ்சின்களிலும் பறவைகள் மோதிச் சிக்கிக் கொண்டதால் அது சோளக்காடு ஒன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

233 பேருடன் பயணித்த யூரல் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான ஏர்பஸ் 321 ரக விமானம், விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சற்று நேரத்தில் பறவைக் கூட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

இதனால் விமானத்தின் ஒரு எஞ்சினில் தீப்பிடித்தது. மற்றொன்று செயலிழந்தது. அப்போது படபடவென்ற சத்தத்துடனும், புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்ததாக அந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பறவைகளில் சில விமானத்தின் இயந்திரத்தினுள் இழுக்கப்பட்டதால் அது ஸுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சோளக்காட்டில் எந்த வித ஆபத்தும் இன்றி அதிர்ஷ்டவசமாக தரையிறக்கப்பட்டது. எஞ்சின்கள் நிறுத்தப்பட்ட நிலையில் தரையிறங்கும் சக்கரங்கள் இன்றி அதிசயிக்கத்தக்க வகையில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

விமானத்திலிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் சிறு காயங்களோடு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

விமானத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் மீண்டும் பறக்க முடியாமல் போகலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விமானப்போக்குவரத்துத் துறையில் விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் வழக்கமானதான ஒன்றாகும்.

அமெரிக்காவில் மாத்திரம் ஆண்டுதோறும் இவ்வாறான ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகின்றன. எனினும் இச்சம்பவங்களால் விமானத்திற்கு பாரிய சேதம் ஏற்படுவது அரிதான ஒன்றாகவே காணப்படுகின்றது.


Add new comment

Or log in with...