செபம்! கேட்டதைக் கொடுக்கும் இயந்திரம் அல்ல | தினகரன்

செபம்! கேட்டதைக் கொடுக்கும் இயந்திரம் அல்ல

தவக்காலத்தின் இரண்டாம் வாரம் கற்பிக்கும் பாடம்!

இயேசுவின் உருமாற்றம் மற்றும் ஆபிரகாமின் வாழ்வு  ஆகியவை குறித்து சில தெளிவுகளை கடந்த ஞாயிறு எமக்குத் தந்தது.

தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று  இயேசு சந்தித்த சோதனைகளைப் பற்றியும் இரண்டாம் ஞாயிறு இயேசு உருமாற்றம் பெற்ற நிகழ்வையும் சிந்திக்க திருச்சபை நம்மை அழைக்கின்றது.

சோதனைகள் மனித வாழ்வின் இன்றியமையாத ஓர் அனுபவம். உருமாற்றம் உட்பட மாற்றங்கள் மனித வாழ்வின் மையமான ஓர் அனுபவம். தவக்காலத்தில் நாம் அடிக்கடி சிந்திக்கும் விடயம் மாற்றமே மனமாற்றம் இதில் முக்கியத்துவம் பெறுகிறது.

மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும் என்ற கேள்விக்கு கடந்த ஞாயிறு முதல் வாசகம் பதில் தருகின்றது. ஆண்டவருக்கும் ஆபிராமுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பில் அந்நாட்களில்ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார்" என்றார். (தொடக்க நூல் 15: 5)

ஆண்டவர் ஆபிராமைவெளியே அழைத்து வந்தார் என்பது மட்டும் கூறப்பட்டுள்ளதே தவிர எங்கிருந்து அழைத்து வந்தார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆபிராமை அவரது கூடாரத்திலிருந்து வெளியே அழைத்துவந்தார் என்று எண்ணிப்பார்ப்பதைவிட  ஆபிராமை 'தான்' என்ற குறுகிய நிலையிலிருந்து வெளியே அழைத்துவந்து, "வானத்தை நிமிர்ந்து பார்க்க"கட்டளையிட்டார் என பார்க்கலாம்.

ஆண்டவரைச் சந்திக்கவும் அதனால் உருவாகும் மாற்றங்களுக்கு வழிவகுக்கவும் 'தான்' என்ற நிலையிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். இது நாம் கற்றுக்கொள்ளும் முதல் பாடம்.

'தான்' என்ற நிலையிலிருந்து வெளியேச் செல்வது கடினமான ஒரு பயணம். ஆபிராமுக்கு இந்த அழைப்பு தொடர்ந்து வழங்கப்பட்டது.

ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்" என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்...ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து.

ஆபிராம் தனக்குப் பழக்கமான இடம் உறவு அனைத்தையும் விட்டு புதியதொரு வாழ்வைத் துவக்க அழைக்கப்படுகிறார். மாற்றங்களை அதிகம் விரும்பாத 75 வயதில் இது உண்மையிலேயே கடினமானதொரு சவால்.

‘ஆபிராம்’ என்ற பெயருடன்தொடங்கி, ‘ஆபிரகாம்’ என்ற பெயருக்கு மாற்றமடைந்தவரின் (தொ.நூ.17:5) வாழ்வில் இறைவன் வழங்கிய சவால்கள் அனைத்தும் தான் என்ற நிலையை மீண்டும் மீண்டும் தாண்டி, 'வெளியே செல்ல' அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்களாகும்.  'ஆபிராம்', 'ஆபிரகாமாக' மாறியது, வெறும் பெயரளவு மாற்றம் அல்ல ஒரு முழுமையான மனித மாற்றம். மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் தவக்காலத்தில் 'தான்' என்ற சிறையிலிருந்து வெளியேறும் முயற்சிகளை மேற்கொள்கிறோமா என்று நாம்ஆய்வு செய்வது நல்லது.

ஞாயிறு நற்செய்தியில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வைச் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

பலவேளைகளில் நாம் மேற்கொள்ளும் செபம் எந்த ஒரு மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்று மனம் தளர்ந்துபோகிறோம். காசைப் போட்டால் நாம் விரும்பும் பொருள்களைப் பெறும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் இயந்திரத்தைப் போல செபத்தை நாம் உருவகிப்பதால் இந்தப் பிரச்சினை எழுகிறது. கேட்டதைக் கொடுக்கும் இயந்திரம் அல்ல செபம்!

நாம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக செபிக்கத் தொடங்குகிறோம். நாம் எதிர்பார்த்த்து எதிர்பார்த்த வடிவில் வந்து சேராதபோது செபத்தின் மீது நம் நம்பிக்கை குறைகிறது.

தர்மம், செபம், நோன்பு என்ற மூன்று தூண்கள் மீது எழுப்பப்படும் தவக்காலத்தில் செபத்தையும் அது நமக்குள் உருவாக்கும் மாற்றங்களையும் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணங்களில் தெளிவு பெற  இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.

ஒவ்வொரு மாற்றமும் நமக்குள் உருவாக வேண்டும். ஆழ்ந்த அன்பினால் அனைத்தும் மாறும். இறையன்பு வெறும் உணர்வாக இல்லாமல் நம் வாழ்வில் செயலாக மாறவேண்டும் என்று இயேசுவின் உருமாற்றம் நமக்குச் சொல்லித்தரும் பாடம். இத் தவக் காலத்தில் நாம் அதனைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.          -

(ஜெரோம் லூயிஸ்)


Add new comment

Or log in with...