உள்ளூர் சோள விதைகளில் படைப்புழுவை எதிர்க்கும் சக்தி | தினகரன்

உள்ளூர் சோள விதைகளில் படைப்புழுவை எதிர்க்கும் சக்தி

சேனைகளில் கூடுதல் அறுவடை 

நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்புச் செலுத்திவரும் விவசாயத்துறை அண்மைக் காலமாக படைப்புழுத் தாக்கத்தினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக சோளம் உற்பத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் படைப்புழுவினால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.  

படைப்புழுத் தாக்கத்தினால் கிழக்கு மாகாண விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை, மட்டக்களப்பு பகுதிகளில் சேனைப் பயிர்ச் செய்கையாக மேற்கொள்ளப்படும் சோளத்தை படைப்புழு தாக்கியுள்ளது. இதனால் பெரும் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோளம் உற்பத்தி பாதிப்படைத்துள்ளது. சோளப் பயிர்ச்செய்கை மாத்திரமன்றி கரும்பு, நெல், மரக்கறி வகைகள் உள்ளிட்ட ஏனைய பயிர்ச்செய்கைகளையும் இந்த படைப்புழு தாக்கியுள்ளது. காற்றினால் இது பரவுவதாகக் கூறப்படும் நிலையில் இதன் பரவல் வேகம் அதிகமாகவுள்ளது. 

படைப்புழுவின் தாக்கத்தினால் அநுராதபுரம், அம்பாறை, மொனராகலை குருநாகல் போன்ற மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இன்னமும் உரிய கிருமி நாசினி கண்டுபிடிக்கப்படாத நிலையில் விவசாயிகள் படைப்புழுவை அழிப்பதற்கு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் இது வெற்றியளித்துள்ளதுடன், பல்கலைக்கழகங்களின் விவசாய பீடங்கள் இது தொடர்பில் ஆராய்ச்சிகளையும் ஆரம்பித்துள்ளன. 

உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.தேவராணி

இவ்வாறான நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ளூர் சோளம் விதையைப் பயன்படுத்தி பயிரிடப்பட்ட சோளம் சேனையொன்று படைப்புழுவின் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமம் பகுதியில் பயிரிடப்பட்ட உள்நாட்டு சோள இனமான எம்ஜ. மைசி எச்வை- 01 (MI – Maize HY-01) இனமே படைப்புழுவின் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளது.  மகா இலுப்பள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த சோள இனமானது வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறப்படும் படைப்புழுவின் தாக்கத்தை எதிர்கொண்டு சிறந்த விளைச்சலைக் கொடுத்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

எம்ஜ. மைசி. எச்வை-01 இன சோளச் செய்கையின் அறுவடை விழாவும் விவசாயிகளை தெளிவூட்டும் கருத்தரங்கும் கண்ணகி மேட்டுநில பயிர்செய்கையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தம்பிலுவில் கமநல சேவை திணைக்களத்தின் உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.தேவராணி தலைமை தாங்கினார். இதன்போதே குறித்த இனச்சோளச் செய்கையின் வெற்றி தொடர்பில் விவசாய போதனாசிரியர்களினால் கருத்து தெரிவிக்கப்பட்டதுடன் குறித்த சோளச்செய்கையினை சிறப்பாக மேற்கொண்ட விவசாயியான வேலாயுதத்துக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. 

“நாட்டிலே படைப்புழுவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. ஆனால் கண்ணகிகிராமத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள நமது நாட்டின் எம்ஜ. மைசி எச்வை-01 சோளச் செய்கையில் படைப்புழுவின் தாக்கத்தை காண முடியவில்லை. குறித்த இனத்தின் எதிர்ப்பு சக்தியும் அதேவேளை விவசாயியின் சிறந்த பராமரிப்பும் இதற்குக் காரணம். படைப்புழுவின் தாக்கம் பெரிதும் பாதிக்கப்படாத இவ்வினத்தை எதிர்காலத்தில் விவசாயிகள் பயன்படுத்தவது உகந்தது. இந்த விதையானது குறைந்த விலையில் கிடைப்பதால் இதனை ஏனைய விவசாயிகளுக்கும் பெற்றுக் கொடுக்க திணைக்களம் தயாராகவுள்ளது” என விவாசயத் திணைக்கள அதிகாரிகளும், துறைசார் நிபுணர்களும் கருத்து வெளியிட்டனர். 

விவசாயி வேலாயுதம்

படைப்புழுவை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதற்காக விவசாயிகள் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் அவர்கள் தெளிவூட்டினர். 

தனது இந்த வெற்றியான அறுவடை தொடர்பில் கருத்துத் தெரிவித்த விவசாயி வேலாயுதம் “எனக்குத் தெரிந்தவரையில் இது போன்ற புழுவின் தாக்கத்தை நாம் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை. ஆனாலும் எனது சோளச்செய்கையினை படைப்புழு தாக்கவில்லை. இதனால் எனது சோளச்செய்கை வெற்றியளித்துள்ளது. இதற்கு பிரதான காரணமாக இருப்பது நான் நட்ட சோள இனமாகும். இதற்கு மேலாக எனது கடின உழைப்பும் காரணம் என கூற விரும்பகின்றேன். ஆகவே சோள செய்கையாளர்கள் நமது நாட்டின் எம்ஜ. மைசி எச்வை-01 இனத்தை பயிரிடுமாறு சக விவசாயிகளிடமும் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக்கான பணத்தை சேமிக்கவும் முடியும்” என்றார். 

வேலாயுதம் போன்று ஏனைய விவசாயிகளும் உள்நாட்டு விதைகளுக்கு முக்கியத்துவமளித்து அவற்றை பயிரிடுவதன் மூலம் படைப்புழு போன்ற தாக்கங்களிலிருந்து வெற்றிகரமாகத் தப்பித்துக்கொள்ள முடியும்.

அதிக  விளைச்சலுக்கு ஆசைப்பட்டு ‘ஹைபிரிட்’ விதைகளைப் பயன்படுத்துவதைவிட உள்ளூர் விதை கள் நஷ்டமற்ற அறுவடையைத் தரும் என்பது அவருடைய நம்பிக்கையாவுள்ளது.  

வி.சுகிர்தகுமார் (வாச்சிக்குடா விசேட நிருபர்)


Add new comment

Or log in with...