Friday, April 26, 2024
Home » அரசாங்கம் மாறும்போது மாற்றமடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை

அரசாங்கம் மாறும்போது மாற்றமடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை

- அறிமுகப்படுத்த அவசியமான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன

by Rizwan Segu Mohideen
December 18, 2023 7:54 pm 0 comment

அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

அதற்கான அடிப்படை பணிகள் அடுத்த வருடம் முதல் மேற்கொள்ளப்படும் எனவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் சர்வதேச முதலீட்டு செயலமர்வு ஒன்றை அடுத்த வருடம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்காக இரண்டு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், அந்த நிதியை டிஜிட்டல் மயமாக்கலுக்கு பயன்படுத்துவதன் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை மக்கள் அதன் பயனைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,

“ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்படும் வரை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய வார்த்தைகள் இந்த நாட்டில் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டன. ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையினால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவை இலகுவாகப் பயன்படுத்த முடியும்.

உலக நாடுகளில் இந்த முறைமைகளைப் பயன்படுத்தி, பொருளாதாரம் எவ்வாறு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டுகொள்ள முடிந்துள்ளது. முன்னேறும் உலகுடன் இணைந்து, நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

இதன்படி, நாட்டின் பொருளாதாரத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் வழங்கி வந்த பங்களிப்பை 03 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், செயற்திறன் மிக்க அரச சேவையைப் பேணுவதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது. அதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் ஆற்றல் கிடைக்கின்றது. தனியார் துறை ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி வேகமாக முன்னேறிச் செல்கின்றது.

அதன் ஊடாக போட்டித் தன்மை கொண்ட சேவைகளை வழங்குவதற்கு அரச சேவையை வலுப்படுத்தும் ஆற்றல் டிஜிட்டல்மயமாக்கலுக்கு உண்டு. இந்த முழுமையான செயல்முறைகளின் மூலம் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.” என்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT