Friday, April 26, 2024
Home » உணவுப் பிரச்சினை; தப்பியோடிய கைதிகளில் 102 பேர் கைது

உணவுப் பிரச்சினை; தப்பியோடிய கைதிகளில் 102 பேர் கைது

- 36 பேரை கைது செய்ய பொலிஸார் தேடுதல்

by Rizwan Segu Mohideen
December 12, 2023 10:36 am 0 comment

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் பொலன்னறுவையின், வெலிக்கந்தவிலுள்ள, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று மாலை வேலிகளை உடைத்து தப்பியோடிய கைதிகளில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை இன்றையதினம் (12) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 102 கைதிகளும் ஹிங்குரக்கொட, மீகஸ்வெவ, பொலன்னறுவை, புலஸ்திபுர பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சுமார் 485 கைதிகள் புனர்வாழ்வு பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய சந்தேகநபர்கள் 20 – 47 இற்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய கைதிகளில் 36 பேரை தொடர்ந்தும் தேடி வருவதாக, வெலிக்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

வெலிக்கந்த, புலஸ்திபுர, மீகஸ்வெவ, ஹிங்குரக்கொட, மன்னம்பிட்டிய உள்ளிட்ட மேலும் பல பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் ஒத்துழைப்புடன், தப்பியோடிய கைதிகளை தேடும் விசேட நடவடிக்கையை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

உணவுப் பிரச்சினையின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக ஆரம்பத்தில் 12 கைதிகள் நேற்று (11) பிற்பகல் தப்பிச் சென்றதாகவும், பின்னர் ஏனைய கைதிகள் அவ்வப்போது தப்பிச் சென்றதாகவும் விசாரணை நடத்திய பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள கைதிகளை கைது செய்வதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமின் பாதுகாப்பிற்காக 52 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று கடந்த வருடம் நவம்பர் மாதம் கைதிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, மறுவாழ்வு மையத்தின் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்தவாறு, சுமார் 200 கைதிகள் தப்பிச் சென்ற நிலையில் பாதுகாப்புப் படையினரால் அர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா, பொலன்னறுவை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஷானக டி சில்வா, வெலிகந்தவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல மற்றும் வெலிக்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமந்த ரத்நாயக்க உள்ளிட்ட விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT