இஸ்ரேலுக்கு குத்தகைக்கு விட்ட நிலங்களை கேட்கும் ஜோர்தான் | தினகரன்

இஸ்ரேலுக்கு குத்தகைக்கு விட்ட நிலங்களை கேட்கும் ஜோர்தான்

இஸ்ரேலுடனான 1994 அமைதி உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேலுக்கு குத்தகைக்கு வழங்கிய இரு பகுதி நிலங்களை மீளப் பெற திட்டமிட்டிருப்பதாக ஜோர்தான் குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் நஹராயிம் மற்றும் தெற்கில் ட்சோபர் பகுதிளையே ஜோர்தான் மீளப் பெற திட்டமிட்டுள்ளது. இந்த பகுதிகள் 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதோடு அது புதுப்பிக்கப்பட வேண்டி உள்ளது.

எனினும் தற்போதைய ஏற்பாட்டை நீடிப்பதற்கு இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், இஸ்ரேலிய விவசாயிகள் பயிர் செய்யும் மொத்தம் சுமார் 1000 ஏக்கர் கொண்ட இரண்டு பகுதிகளின் குத்தகையை முடித்துக் கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பும் ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் இந்த உடன்படிக்கை தானாக நீடிக்கப்படும் என்ற நிலையிலேயே குத்தகை முடிவதற்கு ஓர் ஆண்டு இருக்கும் நிலையில் ஜோர்தான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. எனினும் இந்த குத்தகையை நீடிப்பதை தவிர்க்க ஜோர்தான் மன்னருக்கு அந்நாட்டு எம்.பிக்கள் மற்றும் பொதுமக்கள் இடம் இருந்து அழுத்தம் அதிகரித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை நீடிக்கக் கூடாது என 87 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனு அளித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை ஜோர்தான்் தலைநகர் அம்மானில் பொது மக்களும் இதுதொடர்பாக போராட்டம் நடத்தினர். இஸ்ரேலோடு அமைதி உடன்படிக்கை செய்து கொண்ட இரு அரபு நாடுகளில் ஒன்றாக ஜோர்தான் உள்ளது. மற்றைய நாடு எகிப்து ஆகும்.

எனினும் ஜெரூசலம் விவகாரம் மற்றும் இழுபறிக்கு உள்ளாகியுள்ள இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஜோர்தான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான உறவில் அண்மைக்காலமாக விரிசலை ஏற்படுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...