போராட்டக் களமாகிய சபரிமலை நுழைவாயில்! | தினகரன்

போராட்டக் களமாகிய சபரிமலை நுழைவாயில்!

கேரளாவில் சபரிமலை நோக்கிச் செல்லும் பெண்களை தடுத்துப் போராடிவந்த பா.ஜ.க ஆதரவு அமைப்பைச் சேர்ந்த பெண்களை பொலிசார் நிலக்கல் கிராமத்தில் இருந்து அகற்றிய நிலையில் பெண் பக்தர்கள், பெண் பத்திரிகையாளர்கள் ஆகியோர் பம்பை வரை செல்லத் தொடங்கியுள்ளனர்.

பம்பையைத் தாண்டி சபரிமலை செல்ல முயன்ற ஒரு தாயையும், மகளையும் அங்கே கூடியிருந்த 50 போராட்டக்காரர்கள் தடுக்க முயன்றனர். இதையடுத்து அவர்களை பொலிசார் கைது செய்தனர். அந்தத் தாயும் மகளும் பயந்து போய் திரும்பிச் சென்று விட்டனர். அவர்கள் இருவரும் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, முதல் முறையாக கோயில் நடை திறக்கும் நாளான நேற்று புதன்கிழமை மலைக்கு வரும் பெண்களை தடுக்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கேரள அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களையும் பா.ஜ.க ஆதரவு போராட்டக்காரர்கள் தாக்கினர். தங்கள் நிறுவனத்தின் செய்தியாளர் சரிதா பாலன் தாக்கப்பட்டதாக நியூஸ் மினிட் தளத்தின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை அடிவாரத்தில் உள்ள நிலக்கல் கிராமத்தில் வாகனங்களை மறித்த போராட்டக்காரர்கள் அவ்வாகனங்களில் இருந்த பெண்களை கீழே இறக்கி விட்டனர்.போராட்டக்காரர்கள் அமைத்திருந்த முகாம் பந்தலை பொலிசார் அகற்றினர். இரவு முழுதும் பாட்டுப்பாடியும், பயணிகளை தடுத்து நிறுத்தியும் பெரிய அளவில் அமளியில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பம்பையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பொலிசாரில் இளம் பெண்களும் இருக்கிறார்கள். ஒரு குழு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டவுடன் வேறொரு போராட்டக்குழுவினர் அங்கு வந்துவிடுகிறார்கள்.

பத்து முதல் ஐம்பது வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு பல ஆண்டுகளாக தடை இருந்துவந்தது. இந்தத் தடையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நீக்கிவிட்டாலும், சபரிமலைக்கு செல்லும்வழியில் உள்ள இந்த நிலக்கல் கிராமத்தில் கடந்த ஒரு வாரகாலமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடந்து வந்தது.

கடந்த செவ்வாயன்று, பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவுடன் செயல்படும் இந்து அமைப்பைச் சேர்ந்த பெண்கள் குழுவினர் சபரிமலைக்குச் செல்லும் வாகனங்களை அடிவாரமான நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி, அதில் இளவயது பெண்கள் இருந்தால் அவர்களை இறக்கிவிட்டு செல்ல நிர்ப்பந்தித்து வந்தனர்.

நிலக்கல் முகாமில் போராட்டம் நடத்திய பெண்கள் மற்றும் ஆண்கள் சுவாமி ஐயப்பன் புகைப்படம் ஒன்றை வைத்து, பூசை நடத்தி, பிரசாதம் வழங்கி கோஷமிட்டனர். வாகனங்களை தடுத்து நிறுத்தும்போது சரண கோஷங்களை சொல்லி பெண்கள் இறங்க வேண்டும் என்று கூச்சலிட்டனர்.

சில வாகனங்களை தடுத்துநிறுத்தி கோஷமிட்ட அவர்கள், இளவயது பெண்கள் இருந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். பொலிசார் சமாதானம் செய்துவைப்பதற்குள் அந்த வாகனங்களில் இருந்தவர்கள் அச்சத்தில் திரும்பிச் சென்று விட்டனர். பெண் பத்திரிகையாளர்களைக் கூட மலைக்கு அனுப்பப் போவதில்லை என போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

செவ்வாயன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள அரசாங்கம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் என்றும் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு எந்த விதத்திலும் சிரமங்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

கோயிலுக்கு வரும் அனைத்து வயது பெண் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500இற்கும் மேற்பட்ட பொலிசார் கோயிலுக்கு செல்லும் வழியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் நேற்று நிலக்கல் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

நாள் முழுவதும் இந்த போராட்டத்தை தொடரும் வகையில், ஆண்களும் பெண்களுமாக 100 பேர் கொண்ட குழு ஒன்று நிலக்கல் கிராமத்தில் முகாமிட்டுள்ளது.

ஐயப்பன் பிரம்மச்சாரி என்றும் எனவே மாதவிலக்கு வரும் வயதுடைய பெண்கள் ஐயப்பனை சென்று பார்க்கக் கூடாது என்றும் தெரிவிக்கும் இந்தப் பெண்கள், உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு மீது மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

ஆனால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "இந்த தீர்ப்பு மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது. உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.

"இந்த கோயிலுக்கு வரும் எல்லா வாகனங்களையும் நாங்கள் சோதனை செய்வோம். 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் இருப்பதைக் கண்டால் அவர்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம். பாரம்பரியம் அப்படியே பின்பற்றப்படுவதை நாங்கள் விரும்புகிறோம். பெண்கள் இந்த கோயிலுக்கு வர விரும்பினால், 50 வயது ஆகும் வரை காத்திருக்கட்டும்" என்று போராட்டக்காரர்கள் நேற்று உறுதியாகக் கூறினர்.

பக்தர்கள் நிரம்பிய அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும், தனியார் வாகனங்களையும் பெண் பேராட்டக்காரர்கள் நிறுத்தி சோதனையிட்டனர்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பவர்களில் ஒருவரான இளம் பெண்ணான நிஷா மணி

"நான் இங்கேயே பிறந்தேன். இங்குதான் வளர்ந்தேன். எனது குடும்பத்திலுள்ள ஆண்கள் சபரிமலை கோயிலுக்கு சென்றுள்ள நிலையில், நான் இதுவரை அங்கு சென்றதில்லை. இந்தக் காட்டின் மத்தியில்தான் வசிக்கிறேன். இந்தக் கோயிலை சென்றடைய பல வழிகள் உள்ளன. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகின்ற பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு இந்தக் கோயிலுக்கு நான் போகவில்லை. இளம் பெண்கள் இந்தக் கோயிலில் நுழைவதை தடுக்க இங்கு வருகின்ற எல்லா வாகனங்களையும் நிறுத்தி விடுவோம்" என்று கூறினார்.

"உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இளம் பெண்களை இந்தக் கோயிலில் நுழைய அனுமதித்தால், கூட்டாக தற்கொலை செய்து கொள்வோம்" என்றுகூட போராட்டக்காரர்களில் சிலர் கூறினார்.

ஒக்டோபர் 17-ம் திகதியான நேற்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற சாமி தரிசனத்திற்காக அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விநாயகரை வழிபட பிரதான கோயிலில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பம்பா வரை பெண் பக்தர்கள் முன்னர் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இந்திய உச்ச நீதிமன்ற ஆணைக்குப் பின்னர் பம்பா வரையில் பெண்கள் செல்வதைக்கூட இந்தப் போராட்டக்காரர்கள் தடுத்து விட்டனர்.உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பேரணிகள் நடத்தப்பட்டன. கேரள மாநில பெண்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது.

இதுஇவ்விதமிருக்க, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 40 வயதான மாதவி என்பவர் நுழைந்து புதிய வரலாறு படைத்துள்ளார். பல நூற்றாண்டுகள் கழித்து மாதவிலக்கு வயதுடைய பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

சபரிமலை செல்வதற்காக பத்தனம்திட்டாவில் பேருந்துக்காக பெண்கள் நேற்றுக் காத்திருந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மாதவி. 40 வயதான இவர் சபரிமலைக்கு சென்றார். அப்போது போராட்டக்காரர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து சன்னிதானத்துக்கு செல்ல முடியாமல் தவித்த மாதவியை பொலிஸார் மீட்டு பாதுகாப்பாக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். இதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு முதல் முறையாக 40 வயது பெண் சபரிமலை சென்ற புதிய வரலாற்றை மாதவி படைத்தார்.

பெண் ​ெடாக்டர்களையும் போராட்டக்காரர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தினர். அவர்களின் வயது குறித்து அறிந்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்காக வந்த டாக்டர்கள் இவர்கள். இதேவேளை கேரளாவில் சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் தடுக்க உயிரை விடக் கூட தயார் என்று கேரளாவைச் சேர்ந்த பழங்குடி மக்கள் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். நிலக்கல் பகுதியை சுற்றி இருக்கும் பழங்குடி மக்கள் இந்த பாரம்பரியத்தை மாற்றக் கூடாது என்று உறுதியாக உள்ளனர்.

"எங்கள் காடுகளின் கடவுள் ஐயப்பன். அவரின் புனிதத்தைக் காக்க வேண்டும். என்ன ஆனாலும் பெண்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம். நாங்கள் சாகத் தயாராக இருக்கிறோம்.பொலிஸ் வந்தாலும் எதிர்த்து நிற்போம். எங்கள் உயிரைவிட்டாவது சபரிமலையை கோவிலை காப்பாற்றுவோம்" என்று அவர்கள் கூறினர்.


Add new comment

Or log in with...