Friday, April 26, 2024
Home » மலைக்குச் செல்ல மாலை

மலைக்குச் செல்ல மாலை

by damith
December 4, 2023 6:17 am 0 comment

“மலைக்குச் செல்ல மாலை போடுவது என்பது சாதாரணமானது அல்ல. மன்னருக்கு கிரீடம் எப்படியோ, முத்திரைக் கணையாழி எப்படி தனி அடையாளமோ, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் அடையாளம்… நாம் அணியும் மாலைதான். நாம் மாலையை எப்போது போட்டுக்கொள்கிறோமோ, அப்போதே மாலையுடன் சேர்ந்து ஐயப்பனும் நம்மோடு இருக்கத் துவங்கிவிடுகிறார்.

ஆக, மாலை வடிவில் சாட்ஷாத் ஐயப்பனே நம்முடன் இருக்கிறார் என்பதை, பக்தர்கள் உணரவேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தான் ஐயப்பனும் சாப்பிடுகிறார். இதையெல்லாம் சரியாகப் புரிந்து, உணர்ந்து நடந்தால், கெட்ட எண்ணங்கள் நமக்குள் வராது. துர் குணங்கள் அடியோடு ஒழிந்துவிடும்.

இன்னொரு விஷயம்… முதல் முறை உபயோகித்த மாலையையே ஒவ்வொரு வருடமும் பயன்படுத்துங்கள். ‘மாலை அறுந்துருச்சே… என்ன செய்றது’ என்று கேட்கிறார்கள் சிலர். அதையே சரிசெய்து, போட்டுக்கொள்ளுங்கள். அந்த மாலையில் சாந்நித்தியமானது குடிகொண்டிருக்கிறது. அது… ஐயப்பனின் சாந்நித்தியம்’’ என்று தெரிவித்துள்ளார் நம்பியார் குருசாமி.

சில சூட்சும சக்திகளை நாம் உணருவதே இல்லை. ஐயப்ப விரதத்துக்காக நாம் அணிந்துகொள்ளும் அந்த துளசி மாலையில், சூட்சும ரூபமாய் ஐயப்ப சுவாமி உட்கார்ந்து கொள்கிறார். அவர் நம் பேச்சைக் கேட்கிறார். நம் செயல்களைப் பார்க்கிறார். நம் குணங்களை முழுவதுமாகப் புரிந்து கொள்கிறார். நம் கஷ்டங்களையும் துக்கங்களையும் அறிந்து கொள்கிறார். அவற்றில் இருந்து அரணென நம்மைக் காத்து, காபந்து செய்து அருள்கிறார்.

கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர் என்கிற சாமி அண்ணாவுக்கு, தன் சூட்சுமத்தை உணர்த்த திருவுளம் கொண்டார் ஐயப்ப சுவாமி. அவர் தம்பி, தீவிர ஐயப்ப பக்தர். இவரும் பக்திமான்தான். ஆனால்… ஒருநாள்… அண்ணனுக்கும் தம்பிக்கும் ஏதோவொரு சண்டை. இரண்டுபேரும் வார்த்தையால் முட்டிக்கொண்டார்கள்.

வார்த்தைகள் தடித்துக் கொண்டே வந்து விழுந்தன. அப்படி தீவிரமடைந்த போது, சாமி அண்ணா, கோபமாகவும் ஆவேசமாகவும் தம்பியிடம்… ‘‘பதில் சொல்லு. இதுக்கு உனக்கு பதில் தெரியலேன்னா, உன் ஐயப்பனாவது பதில் சொல்லுவானா. அவனுக்காவது பதில் தெரியுமா?’’ என்று கேட்டார். ஆனால் தம்பி இதற்கு பதிலேதும் சொல்லவில்லை. ஐயப்ப சுவாமிதான் பதில் சொன்னார். அன்றிரவு… சாமி அண்ணாவின் கனவில் ஐயப்பன் தோன்றினான். ‘மலையேறி வா’ என்று அசரீரி போல் கேட்க… திடுக்கிட்டு எழுந்தார். ‘மலையேறி வா…’ எனும் வாசகம் திரும்பத் திரும்ப எதிரொலித்தது. வேதங்களையும் யோக சாதகங்களையும் கற்றறிந்த சாமி அண்ணாவால், இந்த அழைப்பை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

வாழ்வில், முதன்முறையாக சபரிமலை யாத்திரையை மேற்கொண்டார் சாமி அண்ணா.சத்தியம்தான் கடவுள். சத்தியம்தான் பக்தி. சத்தியம்தான் மனிதம். சத்தியம்தான் உலகம். சத்தியம்தான் வாழ்க்கை. சத்தியத்தை உணர, மார்க்கங்கள் பல உண்டு. நிதர்சனமான அந்தச் சத்தியத்தை, சந்நிதானத்தில் தரிசித்தார் சாமி அண்ணா. ஐயனைக் கண்டதும் நெக்குருகிப் போனார். நெகிழ்ந்து போனார். அவரிடம் இருந்த கொஞ்சநஞ்ச கோபமும் ஆவேசமும் அவரில் இருந்து, கரைந்து, வழிந்து, திரவக்கரைசலென அவரை விட்டு அகன்றது. அந்த ஐயப்ப தரிசனம்தான் அவரை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றது.‘இனி நீயே என் தெய்வம்’ என்று சொல்லிச் சொல்லி உருகினார். ‘உன்னைத் தரிசிக்க வருவதே என் வேலை’ என்று சொல்லிப் பூரித்தார். ‘உனக்குத் தொண்டு செய்வதற்காகவே இந்த வாழ்க்கை; இந்தப் பிறவி’ என உறுதி கொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT