Tuesday, March 19, 2024
Home » சுகாதார அமைச்சின் நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது

சுகாதார அமைச்சின் நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது

by sachintha
December 1, 2023 6:20 am 0 comment

மருந்து தட்டுப்பாட்டுக்கு வெகு விரைவில் தீர்வு

 

சுகாதார அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் எந்த ஒரு நிறுவனமும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாதென சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் உட்பட எந்த நிறுவனமும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாதென தெரிவித்த அவர், அது தொடர்பில் எந்த தீர்மானமோ அல்லது நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இதை பொறுப்புடன் தெரிவிக்க முடியும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார். நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என குறிப்பிட்ட அமைச்சர், எதிர்காலத்தில் முறையான வழிமுறைகள் மூலமே மருந்து கொள்வனவுகள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவினத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

மருந்து தட்டுப்பாட்டுக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்படும். அத்துடன் சுகாதார சேவை ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் சுகாதார சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல அனைவரதும் ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.

சுகாதாரத்துறை நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது. 23,000 மருத்துவர்கள் 43,000 தாதியர்கள் உட்பட மருத்துவ கட்டமைப்பில் 01 இலட்சத்து 46,000 ஊழியர்கள் பணி புரிகின்றார்கள்.

உதாரணமாக நாட்டில் ஐந்து கிலோமீற்றர் தூரத்துக்கிடையில் ஒரு மருத்துவ சிகிச்சை நிலையம் அல்லது மருத்துவமனை இயங்கி வருவது எமது சுகாதாரத் துறையின் முன்னேற்றகரமான நிலையாகும்.மருந்து தட்டுப்பாட்டிற்கு மிக விரைவில் தீர்வு காணப்படும்.

அதற்கான ஆலோசனைகள் தேசிய மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. தரமான மருந்து கொள்வனவுக்கும்,தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கும் முன்னுரிமை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT