Friday, April 26, 2024
Home » இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும்
இந்திய மீனவரின் அத்துமீறல்

இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும்

by sachintha
November 24, 2023 7:22 am 0 comment

கைதுகள் தீவிரப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

இந்த நாட்டின் கடல் எல்லையினுள் இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டுமென்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சுசார் ஆலோசனைக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானமாக, இந்திய மீன்பிடிப் படகுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் கடற்படையின் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பு தொடர்பாகவும் இதன்போது கேள்வியெழுப்பப்பட்டது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கடற்படை அதிகாரிகள், வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கமைய கைதுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கையும் சற்றுக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண கடற்படையினரால் மாத்திரம் முடியாதென்று மேற்படி குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தென்னிந்திய அரசியல்வாதிகளுடன் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடி, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்பதுடன், அதற்காக இனம், பிரதேசம் மற்றும் கட்சி எனும் பேதமின்றி அந்தந்தப் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமெனவும் தெரிவிக்கப்பட்டது.

கிழக்குக் கடலில் மீன்பிடி வலைகளை அறுத்து மீன்களை எடுத்துச் செல்வது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் குழு நீண்ட நேரம் விவாதித்தது.

குழுவில் முன்னர் தெரிவிக்கப்பட்டமைக்கமைய இது தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றியளிக்கப்பட்டமை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பாக தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் மீன்பிடி அதிகமாக இருக்கும் காலங்களில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தால், மீன்களைக் கொள்வனவு செய்து சேமித்து மக்களுக்கு சலுகை விலையில் வழங்கும் முறையை ஏற்படுத்துவதற்கு உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

இதேவேளை, மீனவர்களுக்கான கல்முனை வானொலி மத்திய நிலையத்தை மீள அமைக்கும் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கல்முனை வானொலி நிலையத்துக்கு புதிய வானொலிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை தொடர்பாக முன்னைய குழுவில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தலைவரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது ஒரு இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இரண்டு வானொலிப் பெட்டிகள் நன்கொடையாக பெறப்படவுள்ளதுடன், அடுத்த ஆண்டு ஜப்பானிலிருந்து மூன்று பெட்டிகள் பெறப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, பைஸால் காசிம், சார்ள்ஸ் நிர்மலநாதன், இசுரு தொடங்கொட, சிந்தக அமல் மாயாதுன்ன, ஜகத் சமரவிக்ரம, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, டி.வீரசிங்ஹ ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT