Home » யானை-மனித மோதலை தவிர்ப்பதற்கு தாய்லாந்து நிறுவன உதவியுடன் திட்டம்

யானை-மனித மோதலை தவிர்ப்பதற்கு தாய்லாந்து நிறுவன உதவியுடன் திட்டம்

by sachintha
November 24, 2023 6:01 am 0 comment

அநுராதபுரம் குடாஹல்மில்லாவ கிராமத்துக்கு அதிகாரிகள் குழு விஜயம்

இலங்கையில் யானை_- மனித மோதல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் தாய்லாந்து Save Elephant Foundation மூலம் அநுராதபுரம் அலயாப்பத்துவ குடாஹல்மில்லாவ கிராமத்தில் செயல்திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் குழுவினர்அங்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் அழைப்பையேற்று Rare Srilanka அமைப்பின் ஸ்தாபகர் / பணிப்பாளர் பஞ்சாலி பணாப்பிட்டியவின் ஒருங்கிணைப்பில் தாய்லாந்து Save Elephant Foundation ஸ்தாபகர் Seangdeaunlek Chailert, தாய்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் Nitipon Piwnow உள்ளிட்ட தாய்லாந்து Save Elephant Foundation மற்றும் Rare Srilanka உறுப்பினர்கள் பலர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.

பல மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க இது குறித்து வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளான பல கிராமங்களுக்குச் சென்று அந்தக் கிராமங்களின் மக்களுக்கு காட்டு யானைகளினால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் இழப்பைக் குறைப்பதற்கு ஆலோசனைகளை தயாரிக்கும் வகையில் சுற்றுச்சூழல் விலங்கு உரிமைகள் அமைப்ைப பிரதிநிதித்துவப்படுத்தும் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் பலர் களவிஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த குழுவினர் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து அந்தத் திட்டம் தொடர்பில் கலந்தாலோசித்த பின்னர் கடந்த 21 ஆம் திகதி மேற்படி கிராமத்திற்கு சென்றிருந்தனர். இதன் போது பாராளுமன்ற உறுப்பினரின் பிரதிநிதியாக அவரின் பிரத்தியேக செயலாளர் காவிந்த திஸாநாயக்க கலந்து கொண்டார்.

கிராம மக்கள் அந்தக் குழுவினரை வரவேற்றதுடன், காட்டு யானைகளினால் ஏற்படும் இன்னல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.காட்டு யானைகள் தொடர்ந்து கிராமங்களுக்குள் புகுந்து அவர்களின் வீடு மற்றும் உடைமைகளுக்கும் சேதம் விளைவித்து வருவதுடன் உயிர் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளதாக அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

யானை_-மனித மோதலினால் மனிதர்களினதும் யானைகளினதும் உயிர்கள் கடந்த பல வருடங்களாக இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தக் கிராமத்தில் 400 குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் அவர்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயமே உள்ளது. யானைகளினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக விவசாயிகள் பலர் விவசாயத்தைக் கைவிட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் கருத்தினை அவதானமாக செவிமெடுத்த குழுவினர் கருத்துத் தெரிவிக்கையில் “யானை_ – மனித மோதலைத் தடுப்பதற்கு அந்தக் கிராமத்தைச் சூழ மின்சார வேலி ஒன்றை அமைத்துத் தருவதாக தெரிவித்தனர்.

கிராமத்தின் இளைஞர்களைக் கொண்டு யானை வேலிகளை அமைப்பதற்கு கிராம மக்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கிராமத்தில் சுயபொருளாதாரத்தை விருத்தி செய்யும் நோக்கில் 50 பெண்களுக்கான திட்டமொன்றை ஏற்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.

குறித்த கிராமத்தில் சேதத்திற்குள்ளான வீடுகளை அக்குழுவினர் பார்வையிட்டதுடன், கடந்த காலத்தில் சேதத்திற்குள்ளான 11 வீடுகளை புனரமைப்புச் செய்வதற்குத் தேவையான உபகரணம், நிதி என்பவற்றையும் வழங்கியுள்ளனர்.

மதார் தம்பி ஆரிப்…

(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT