Friday, April 26, 2024
Home » அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவில் அனுமதி
2024 நிதியாண்டுக்கான குறைநிரப்பு பிரேரணைக்கு

அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவில் அனுமதி

மீண்டுவரும் செலவினம் ரூ. 5,350 பில்

by gayan
November 11, 2023 6:45 am 0 comment

மூலதன செலவு ரூ. 2,473 பில்.

2024ஆம் நிதியாண்டுக்கான குறை நிரப்பு பிரேரணைக்கு அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய மீண்டுவரும் செலவினம் 5,350 பில்லியன் ரூபாவென்பதுடன், மூலதன செலவு 2,473 பில்லியன் ரூபாவாகும். மொத்தமாக 7,823 பில்லியன் ரூபாவென்பதுடன், கடன் பெறும் எல்லை 3,900 பில்லியன் ரூபாவெனவும், அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழு நேற்றுக் கூடியது.

இதன்போது, 2024 நிதியாண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

இதற்கமைய 2024 நிதியாண்டுக்கான மீண்டுவரும் மற்றும் மூலதன செலவு, கடந்த வருடத்துக்கு இணையாக ஒப்பீட்டளவில் மதிப்பீடு செய்யப்பட்டு, ஒரு சில விடயங்கள் தொடர்பாக எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வருடாந்த வரவு -செலவுத்திட்ட யோசனைகளில் பெரும்பாலானவை யோசனைகளாகவே வரையறுக்கப்பட்டுள்ளமை சிக்கலானதென குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வரலாற்றில் சகல அரசாங்கங்களாலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் குறைந்தபட்ச யோசனைகள் மாத்திரமே இறுதிக்கட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவொரு தவறான எடுத்துக்காட்டாகும். இந்தத் தவறை திருத்திக்கொண்டு வரவு – செலவுத் திட்டத்தின் பின்னணியை ஆராய்ந்து உரிய தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட விடயங்கள் எந்தளவுக்கு சாத்தியப்படுத்தப்பட்டுள்ளதென்பது தொடர்பாக விரிவான அறிக்கை 13ஆம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைநிரப்பு பிரேரணை 6ஆவது அத்தியாயத்துக்கமைய, ‘அபிவிருத்தி நடவடிக்கைகள்’ எனும் செயற்றிட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பிறிதொரு விடயதானத்துக்கமைய பிறிதொரு செயற்றிட்டத்துக்கு மாற்றுவது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 2016ஆம் ஆண்டு முதல் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியம் தொடர்பாக ஆவணப்படுத்தல் தரவுகளை வெவ்வேறாக குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

வருடாந்த வரவு -செலவுத்திட்ட பற்றாக்குறை 5 சதவீதத்துக்கும் குறைவாக பேணப்பட வேண்டுமெனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT