2019 உலகக்கிண்ண போட்டியில் இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் பங்கேற்க வேண்டும் | தினகரன்

2019 உலகக்கிண்ண போட்டியில் இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் பங்கேற்க வேண்டும்

அரவிந்த டி சில்வா

2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் அனுபவமிக்க வீரர்களான அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் விளையாட வேண்டும் எனவும், அவர்களது பங்குபற்றலானது இளம் இலங்கை அணிக்கு மிகவும் அத்தியவசியமானது என இலங்கையின் முன்னாள் அணித் தலைவரும், நட்சத்திர வீரருமான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக குறித்த வீரர்கள் இருவரும் அணிக்குத் தேவையான தருணங்களில் திறமையை வெளிப்படுத்த தவறி வருவதாகவும், அதிலும் மெதிவ்ஸ் அடிக்கடி உபாதைக்குள்ளாகி வருவதையும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். ஏப்பி செய்திச் சேவைக்கு அண்மையில் வழங்கிய விசேட செவ்வியின் போதே அரவிந்த டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுதந்திர கிண்ண முத்தரப்பு ரி-20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகாத நிலையில், அண்மைக்காலமாக பெற்றுவருகின்ற தொடர் தோல்விகள் இலங்கை அணியின் பின்னடைவை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். அதிலும், கடந்த வருடம் 57 சர்வதேச போட்டிகளில் 40 தோல்விகளைத் தழுவிய இலங்கை அணியின் அண்மைக்கால பெறுபேறுகள் அதன் மீள் எழுச்சியின் தேவையை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றன.

”இலங்கை அணியில் அஞ்செலோ மெதிவ்ஸ்தான் அதி சிறந்த சகலதுறை வீரர் என நான் கருதுகிறேன். அத்துடன், அவருக்கும் சந்திமாலுக்கும் கிரிக்கெட் சார்ந்த பரந்த அறிவுத்திறன் இருக்கின்றது” என 1996 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய இலங்கை அணியின் ஆட்டநாயகனான அரவிந்த டி சில்வா தெரிவித்தார்.

அணித் தலைமைகள் போட்டிகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை எனத் தெரிவித்த அரவிந்த, ”அணித் தலைவராக விளையாடினாலென்ன, சாதாரண வீரராக விளையாடினாலென்ன இருவரும் ஒரே வகையான ஆற்றலையே வெளிப்படுத்துவர்” எனவும் தெரிவித்திருந்தார்.

30 வயதான மெத்திவ்ஸ், சிம்பாப்வே அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் பெற்ற அதிர்ச்சித் தோல்வியினை அடுத்து கடந்த வருடம் ஜூலை மாதம் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகினார். எனினும், சந்திக ஹத்துருசிங்க புதிய பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்ற பிறகு இவ்வருட முற்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணிகளின் தலைவர் பதவியை மீண்டும் அவர் பெற்றார்.

இவ்வருடத்தில் ஒரே ஒரு சர்வதேசப் போட்டியில் மாத்திம் விளையாடிய அவர் மீண்டும் உபாதைக்குள்ளானார். இதனையடுத்து தினேஷ் சந்திமால் இலங்கை அணியை வழிநடத்தி வருகின்றார்.

இந்நிலையில், முன்னேற்றம் கண்டுவரும் இலங்கை அணி இவ்வருட முற்பகுதியில் பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடர் மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ரி-20 தொடர் ஆகியவற்றைக் கைப்பற்றியது. பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக சுமார் 3 வருடங்கள் கடமையாற்றிய சந்திக்க ஹத்துருசிங்க, இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், இலங்கை அணி நாளுக்குநாள் முன்னேற்றம் கண்டு வருகின்றது.

வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை விட உள்ளூர் வீரர்களுடன் தாய் மொழியில் உரையாடும் வாய்ப்பு ஹத்துருசிங்கவுக்கு இருப்பதனால், இன்னும் நல்ல பெறுபேறைப் பெற்றுக்கொள்ள முடியும். ஹத்துருசிங்கதான் இப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் எனவும் அரவிந்த தெரிவித்தார்.

இலங்கை வீரர்கள் அளவுக்கு மீறிய உடல் பருமனை கொண்டிருப்பதே தோல்விகளுக்கு காரணம் எனவும் உடற்தகுதி இல்லை என்றால் அணியில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

வீரர்கள் உடற்தகுதியுடன் இருப்பதாகவும் அவர்களிடம் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் போதுமானளவு இருப்பதாகவும் கிரிக்கெட் குழுவின் தலைவர் பதவியை கடந்த வருடம் இராஜினாமா செய்த 52 வயதுடைய அரவிந்த டி சில்வா குறிப்பிட்டார்.

”அவர்கள் தற்போது கிரிக்கெட் விளையாட்டில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்கள் என நான் நம்புகிறேன். இன்னும் கொஞ்சம் வாய்ப்புகளும் அனுபவங்களும் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் ஒரு புதிய இளம் அணியாக இதனைவிட திறமையை வெளிக்காட்ட ஆரம்பிப்பார்கள்” என்றார்.

1984 முதல் 2002ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக விளங்கிய அரவிந்த டி சில்வா, இளம் அதிரடி ஆட்டக்காரர் குசல் ஜனித் பெரேரா தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்ததுடன், அவரின் ஆற்றலை வெகுவாக பாராட்டியும் இருந்தார். ”அவரை ஒரு சனத் ஜயசூரியவாகவே நான் காண்கின்றேன். அவரைப் போன்ற ஒருவரை டெஸ்ட் அணியில் இருந்து ஒதுக்கிவைப்பது குற்றமாகும்” என அரவிந்த குறிப்பிட்டார்.

அண்மையில் நிறைவுக்கு வந்த சுதந்திர கிண்ண முத்தரப்பு ரி-20 தொடரில் 3 அரைச்சதங்களைக் குவித்து குசல் ஜனித் அசத்தியிருந்தார். 2015ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட குசல், இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளதுடன், 73 ஒரு நாள் மற்றும் 34 ரி-20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், ரி-20 கிரிக்கெட் போட்டியானது சமகால துடுப்பாட்ட வீரர்களின் முன்னேற்றத்துக்கும் அவர்களது அதிரடியுடன் கூடிய அடி தெரிவுகளுக்கும் வழிவகுத்துள்ளதாகவும் அரவிந்த டி சில்வா கூறினார். 


There is 1 Comment

one team one nation enbathu poii muralitharanuku piraku yar sari thamil, player vilayadinaarkala ahh edunga jeyikalam

Add new comment

Or log in with...