Home » தலைசிறந்த முதன்மைக் கட்டளை

தலைசிறந்த முதன்மைக் கட்டளை

by sachintha
October 31, 2023 6:29 am 0 comment

முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் ஆண்டவரை அன்பு செய்தல்

இறைவன் மனிதன் உலகம் என்று உற்றுப் பார்க்கும்போது, இறைவனையும் இயற்கையையும் சார்ந்து வாழும் மனிதன் யாரோடு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இணைந்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் உள்ளத்தில் உலா வருகின்றன.

இந்த எண்ணங்களுக்கு முடிவாகப் பதில் தரும் வண்ணம் கடந்த ஞாயிறு வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் தன்னை மனிதனாக அடையாளப்படுத்திக் கொள்ள எதை எல்லா நேரமும் செய்ய வேண்டும் என்பதை நற்செய்தி தெள்ளத் தெளிவாக வரிசைப்படுத்துகின்றது.

“போதகரே, திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது?” என்ற பரிசேயரின் கேள்விக்கு இயேசு, “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.” இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. என்றார் (மத்தேயு நற்செய்தி 22:37-38)

அதாவது நமது இதயம், உள்ளம், மனம் ஆகிய மூன்றும் முழுமையிலும் முழுமையாக இறைவனோடு, இறைவனுக்குள் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது இறை கட்டளை என்றார்.

இது நடைமுறையில் சாத்தியமா? மனித வாழ்க்கையில் அவன் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகள், போராட்டங்கள், எதிர்பார்ப்புகள் என்று வரிசைப்படும்போது மேற்கூறிய நிலையில் இறைவனில் ஐக்கியமாக முடியுமா?.-

முடியும்…‌ மரியாளின் மைந்தனைப் போல்.

“மனிதனே இறைவனாக. இறைவனே மனிதனாக” பயணிக்க நேர்ந்தால் இது சாத்தியமே.

ஒரு மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் அன்பு, பாசம், நேசம், உரிமை, உறவு இப்படி பல பரிமாணங்களில் தன்னை பிறருள் இணைக்க முயற்சி செய்கின்றான். அமைதியாகக் கவனித்தால் இந்தப் பரிமாணங்களில் பயணிக்கும்போது அவனுள் ஒரு புரிதல், எதிர்பார்ப்பு, நிபந்தனைகள் என ஏதோ ஒரு சுயநல நோக்கு நின்று கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது.

சுயநலம் இல்லாமல் பொதுநலம் இல்லை ஆனால் பல நேரங்களில் இந்தச் சுயநலமே பொதுநலத்தை அழித்து விடுவதையும் நாம் மறுக்க முடியாது.

சுயநலமற்ற நிலையில் தன்னையே மறுத்து ஒருவன் இறைவனை தேடிச் செல்லும்போது இயேசு கூறும் தலையாய கட்டளை தனிச்சிறப்போடு நமக்குள் பயணிக்கும் என்பதும் உண்மை.

ஆதலால் இறைவனோடு காதல் கொள்வோம்.

இந்தக் காதல் என்ற ஒரு நிலை மட்டுமே எல்லையற்ற எதிர்மறை நிகழ்வுகளை எளிதாக நேர்மறைகளாக மாற்றி ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு வாழ்வு நிலையைத் தரக்கூடியதாகும்.

முழுமையாக – ஏற்றுக் கொள்ளவும், விட்டுக் கொடுக்கவும் வியப்படையாத ஒரு நிலை… சேர்க்கை ஆனாலும் இழப்பானாலும்; மகிழ்ச்சியானாலும் – துக்கமானாலும் – முழுமையாக இணைந்து காலமெல்லாம் காத்திருக்கக்கூடிய ஒரு நம்பிக்கை : அர்ப்பணம் என்ன என்பதை வலிமையாக வாழ்க்கைக்குள் கொண்டு வரும் ஒரு சக்தி இந்தக் காதல் என்ற மாயைக்குள் முழுமையாக உயிரோடு செயல்படுகின்றது.

இந்த நிலையைத்தான் விவிலியத்தில் சாலமோனின் உன்னத சங்கீதங்கள் உயிருள்ள கவிதைகளாக, ஓவியமாகப் படைக்கின்றன. குறிப்பாக ஒருமையில் உறவாடும் உன்னத நிலை ஐக்கியத்தின் உச்சத்தை வெளிச்சமிடுகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT