போலி நாணயத்தாள் அச்சு; இளம் தம்பதியினர் கைது | தினகரன்


போலி நாணயத்தாள் அச்சு; இளம் தம்பதியினர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்த இளம் தம்பதியரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூபா 21 இலட்சத்து 48 ஆயிரம் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், அரியாலை - மணியந்தோட்டம் பகுதியிலுள்ள அவர்களுடைய வீட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர் யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியிலிருந்து போலி நாணயத்தாள்களை அச்சிட்டு தனது பணத்தேவைக்கு பயன்படுத்த முற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த விடயம் தொடர்பில் சந்தேகம் கொண்ட கடை உரிமையாளர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து நேற்று (06) பொலிஸார் சந்தேகநபரின் வீட்டுக்கு சென்று சோதனையிட்டுள்ளனர். இதன்போது, அங்கு ரூபா 5,000 போலி நாணயத்தாள்கள் 400, ரூபா 1,000 போலி நாணயத்தாள்கள் 148 உள்ளிட்ட ரூபா 21 இலட்சத்து 48 ஆயிரம் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் அச்சு இயந்திரம் (Printer), ஸ்கேனர் மற்றும் மடி கணனி என்பனவும் மீட்கப்பட்டன.

பொலிஸார் அங்கு சென்றவேளை குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாததனால் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்  நேற்று இரவு (06 பிரதான சந்தேகநபரையும் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

24 வயதுடைய இராசலிங்கம் லபீசன் அவருடைய மனைவியான 19 வயது கிருசாந்தி ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் இன்றையதினம் (07) நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா, புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...