Friday, April 26, 2024
Home » காசாவில் தொடரும் மனிதப் பேரவலம்!

காசாவில் தொடரும் மனிதப் பேரவலம்!

by Rizwan Segu Mohideen
October 29, 2023 5:02 pm 0 comment

ஒருபுறம் வான்வழித் தாக்குதல்கள்; மறுபுறம் உணவு, உயிர் உத்தவாதம், மருத்துவ வசதிகள் இன்றி குழந்தைகள் உட்பட சாதாரண மக்கள் பரிதாப நிலையில்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதல் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருவதனால் சாதாரண பொதுமக்கள் தரப்பிலான உயிரிழப்புகள் அதிகரித்து வருவதையிட்டு உலகம் பெரிதும் கவலையடைந்துள்ளது.

இருதரப்பினரும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இஸ்ரேலில் ஏற்படுகின்ற உயிரிழப்புகளைப் பார்க்கிலும், காசாவில் இடம்பெறுகின்ற உயிரிழப்புகளே மிகவும் அதிகமாக உள்ளன.

இஸ்ரேல் நடத்தி வருகின்ற ஆகாயமார்க்கமான தாக்குதல்களால் காசாவில் இதுவரை ஏற்பட்டுள்ள மனிதப்பேரவலங்கள் வார்த்தையில் வடிக்க முடியாதவையாக உள்ளன. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என்ற வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்கள் மடிந்துள்ளனர். உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

காசா நகரின் இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல் குத்ஸ் மருத்துவமனை பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பலியான மக்களின் பரிதாபங்கள் விபரிக்க முடியாதவையாகும். இந்நிலையில் வடக்கு காசா பகுதியில் உள்ள பாடசாலைகள், மருத்துவமனைகள், பள்ளிவாசல்களும் தாக்குதலுக்கு தப்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் காசாவிற்குள் செல்லும் வீதிகள் சேதம் அடைந்துள்ளதால், நிவாரணப் பொருட்கள் தாமதமாகவே காசாவிற்குள் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் காசாவில் இடம்பெறுகின்ற சாதாரண பொதுமக்கள் உயிரிழப்புகள் தொடர்பாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பினரும் ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். காசா நகரில் ஹமாஸ் தீவிரவாதிகள் தவறுதலாக ஏவுகணைகளை வீசி பாலஸ்தீன மக்களை கொன்று வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஆனால் இஸ்ரேல் படையினரே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக பாலஸ்தீன தரப்பு குற்றம் சாட்டுகின்றது. அதுமாத்திரமன்றி இஸ்ரேல் மீதே உலகநாடுகள் பலவும் குற்றம் சுமத்துகின்றன.

காசா சுகாதாரத்துறை தகவலின் படி, அங்கு சுமார் ஐயாயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் 14 ஆயிரம் பேர் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை இதனைவிட அதிகமென்றே தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் இராணுவம் நடத்திய விமானப்படைத் தாக்குதலில் இதுவரை காசா நகரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் மொத்தமாக சிதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை 1,688 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன தரப்பில் அரசின் சமூகவலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை மரணிப்பதாக மத்திய கிழக்கு ஆசியாவை கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

எல்லை வழியே 20 லொறிகள் காசா நகரத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் வெறும் 22,000 தண்ணீர் போத்தல்கள் மட்டுமே இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 23 இலட்சம் பேர் வசிக்கும் நகரில், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என ஐ.நா வேதனை தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியா உட்பட உலக நாடுகள் பல எகிப்து வழியாக காசாவிற்கு நிவாரணப் பொருட்களை கப்பல் மூலமும் விமானம் மூலமும் அனுப்பி வருகின்றன. இருப்பினும் அவற்றை காசா நகருக்குள் கொண்டு சேர்ப்பது மிகவும் சவால் மிகுந்த பணியாக இருப்பதாக ஐ.நா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காசா நகரின் இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல் குத்ஸ் மருத்துவமனை தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் உள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் உள்ள அல் குச் மருத்துவமனையில் இருந்து இதுவரை 400 அவசர சிகிச்சை நோயாளிகளும், 1200 புற நோயாளிகளும், மருத்துவமனையை சுற்றி தங்கி இருந்த 12,000 மக்களும் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச போர்க் குற்றம் என்பதை இஸ்ரேல் மறந்துள்ளதாக பலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் பதிவிட்டுள்ளது. காசாவில் 10 இலட்சம் குழந்தைகளின் உயிர்கள் உத்தரவாதமின்றி இருப்பதாக Save the Children தன்னார்வ அமைப்பு கூறியுள்ளது.

மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்கள் பற்றக்குறையால் பலருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் பட்சத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 50,000 கர்ப்பிணிகள் போதிய மருத்துவ உதவிகள் இல்லாமல் தவிக்கிறார்கள் என Save the children அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒருபுறம் மருந்துகளின் தட்டுப்பாடு, மறுபுறம் இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர்ச்சியான தாக்குதல் என காசா மக்களும் குழந்தைகளும் இருபெரும் சிக்கல்களுக்கு மத்தியில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காசாவில் இருக்கின்றனர்.

காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பலஸ்தீனிய அதிகாரிகள், இந்த வான்வழித் தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாகக் கூறி இஸ்ரேலைக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இஸ்ரேல் தாம் அதில் ஈடுபடவில்லை என மறுத்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கும் மறுப்புக்கும் இடையில், உண்மையைக் கண்டறிதல் மென்மேலும் கடினமாகியுள்ளது. காசாவில் கடந்த ஏழாம் திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதில் இருந்து இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் இஸ்ரேல் தாக்குதலில் 436 பேர் பலியான சம்பவமொன்று நடந்ததாகவும் பலஸ்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காசாவில் மற்ற அரசு அமைப்புகளைப் போல சுகாதாரத்துறையும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு கொல்லப்பட்டவர்களில் 40 சதவீதமானோர் குழந்தைகள் என காசாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT