பாகிஸ்தான் டெஸ்ட் அணி தலைவராக சர்பராஸ் அஹமட் | தினகரன்

பாகிஸ்தான் டெஸ்ட் அணி தலைவராக சர்பராஸ் அஹமட்

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக சர்பராஸ் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் அவர் தலைவராகியுள்ளார்.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக இருந்தவர் மிஸ்பா உல் ஹக். இவர் சமீபத்தில் முடிவடைந்த மேற்கிந்தியதீவு தொடரோடு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தலைவராக சர்பராஸ் அஹமட் உள்ளார். இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.

இதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பாக வரவேற்பு அளித்தார். அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரான ஷகாரியார் கான், சர்பராஸ் அஹமட் டெஸ்ட் அணி தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். இதன்மூலம் பாகிஸ்தானின் மூன்று வகை கிரிக்கெட் அணிக்கும் சர்பராஸ் அஹமட் தலைவராக செயல்பட உள்ளார்.

இதுகுறித்து ஷகாரியார் கான் கூறுகையில் ‘‘நானும், தலைமை தேர்வாளரும் ஆன இன்சமாம் உல் ஹக்கும் சேர்ந்து ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். இதுதான் வெளியிடுவதற்கு சரியான நேரம் என்று நினைத்தேன்’’ என்றார்.

சர்பராஸ் அஹமட் பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று சதங்கள், 13 அரைசதங்களுடன் 2089 ஓட்டங்கள் குவித்துள்ளார்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...