ஜப்பான், வியட்நாம் நாடுகளுடன் புதுப்பிக்கப்படும் நல்லுறவுகள் | தினகரன்

ஜப்பான், வியட்நாம் நாடுகளுடன் புதுப்பிக்கப்படும் நல்லுறவுகள்

 

வியட்னாம் நாட்டின் மீது கவனத்தைச் செலுத்தும் போது, அந்நாடு மற்றும் இலங்கைக்கிடையிலான தொடர்புகள் மிக நீண்ட கால வரலாற்றினைக் கொண்டிருப்பது தெரியவரும். கலாசார ரீதியில் எடுத்துக் கொண்டால் இரு நாடுகளிடையே இருப்பது நெருங்கிய தொடர்பேயாகும்.

விஷேடமாக இரு நாடுகளும் பௌத்த நாடுகளாக இருப்பதும் இதற்கான தாக்கத்தைச் செலுத்துகின்றது. அந்நாடு இலங்கையினைப் போன்று விவசாய நாடாகும். அதே போன்று உலக அரிசி உற்பத்தியில் உயர் பங்களிப்பைச் செய்கின்றது. அபிவிருத்தியில் எமது நாட்டினை விட கீழ் மட்டத்திலிருந்த நாடாகும்.

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அண்மையில் ஜப்பான் மற்றும் வியட்னாம் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். சர்வதேச அரசியலில் மிக முக்கியமாக அமைந்த பயணத்தின் போது இருதரப்பு தொடர்புகள் வலுவடைவதற்கான பல்வேறு செயற்பாடுகள் எடுக்கப்பட்டன. பிரதமரின் ஜப்பான் மற்றும் வியட்னாம் பயணம் தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ த சில்வாவின் கருத்துகளை மையப்படுத்தி இந்த கட்டுரை எழுதப்படுகின்றது.

ஜப்பான் மற்றும் வியட்னாம் என்பது எமக்கு அண்மைய தேசங்களல்ல. இங்கு நாம் முதலில் ஜப்பான் தொடர்பில் கவனத்தைச் செலுத்துவோம்.

ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையில் இருக்கும் தொடர்புகள் நட்பை விட சகோதர உறவுக்கு நெருக்கமானது என்பதே எனது எண்ணமாகும். இலங்கை மக்கள் ஜப்பான் மக்களுடன் மிக நெருக்கத்தைக் கொண்டிருக்கின்றார்கள். ஜப்பான் மக்களும் இலங்கையர்களான எம்மீது மிகுந்த விருப்பத்தை தெரிவிப்பதாகவே நாம் நம்புகின்றோம். இலங்கையின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் இலங்கைக்கு அதிகளவில் உதவிகளை வழங்கியுள்ள நாடு ஜப்பானாகும். அவை உதவிகள் அல்லது கடனாக மாத்திரமின்றி மீண்டும் செலுத்தாத அன்பளிப்பாக இருப்பது விஷேடமானதாகும்.

ஜப்பான் மக்கள் தமது வரலாற்றில் எமது நாட்டிற்கு மதிப்பளிக்கும் முக்கிய சந்தர்ப்பங்கள் உள்ளன. அது சென்ப்ரென்சிஸ்கோ மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன பௌத்த தர்மத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் ஒன்றை நினைவுபடுத்தி ஆற்றிய உரையாகும். இதனால் இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஜப்பானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டியேற்படவில்லை.

ஜப்பானுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என இதன் போது ஜே. ஆர். ஜயவர்தன கூறியிருந்தார். இதனடிப்படையில் ஜப்பானுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. இன்றும் ஜப்பான் இது தொடர்பில் இலங்கைக்கு மிகவும் மதிப்பளிக்கின்றது. அதே போன்று எமது நாட்டில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது கூட ஜப்பான் பிரதிநிதிகளால் பாரிய பணிகள் செய்யப்பட்டன. இந்த இரு சந்தர்ப்பங்களும் இந்த இருநாடுகளும் நெருக்கமானது என்பதை விபரிக்கும் இரு சந்தர்ப்பங்களாக குறிப்பிட முடியும்.

2015 ஒக்டோபர் மாதத்தில் இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையில் புரிந்துணர்வுடனான தொடர்புகள் ஏற்பட்டன. கடந்த காலங்களில் எனின் இவ்வாறான தொடர்புகளால் அபிவிருத்தி உதவிகள் அல்லது பொருளாதார ரீதியான விடயங்கள் மாத்திரமே இடம்பெற்றன. எனினும் இப்போது அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. வலயத்தின் பாதுகாப்பு, இந்திய சமுத்திரத்தின் பாதுகாப்பு போன்ற வகையில் இவை அனைத்தையும் இணைத்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

அண்மையில் இடம்பெற்ற பயணத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜப்பான் பிரதமர் சின்ஷூவா அபே ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன் போது முதலில் முதலீடுகள் மற்றும் வர்த்தகம் தொடர்பில் ஜப்பானுடன் எவ்வாறு செயற்படுவது என்ற விடயம் பேசப்பட்டது. இதற்குப் புறம்பாக இலங்கையின் தனியார் துறையில் முதலீடு மற்றும் வர்த்தகத்தை மேலும் விருத்தி செய்வது தொடர்பிலும் பேசப்பட்டது.மேலும் இலங்கையின் தேசிய அபிவிருத்திக்காக ஜப்பான் எந்த வகையில் பங்களிப்பை வழங்கும் என்பது தொடர்பில் பேசப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ஜப்பான் ஏற்றுக் கொண்ட ஒரு விடயம் இருந்தது.

அது இந்து சமுத்திரத்தின் முக்கிய கேந்திர நிலையமான இலங்கைக்கு செல்வதற்கு உதவுவது எவ்வாறு என்ற விடயமாகும். ஜப்பானின் ஒபீசியல் டெவலொப்மென்ட் அஸிஸ்டன்ட் மூலம் வழங்கப்பட்டுள்ள பல்வேறு உதவிகள் தொடர்பில் பிரதமர் அவர்களால் இங்கு பேசப்பட்டது. நீர் வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி வட கிழக்கு, வட மத்திய, ஊவா போன்ற மாகாண மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையை முக்கியமான வர்த்தக கடல் கேந்திர நிலையமாக ஆக்குவது தொடர்பிலும் முக்கியமான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன் போது திருகோணமலை துறைமுகத்தை விருத்தி செய்வதற்கு ஜப்பான் உதவி வழங்கும். அத்தோடு வட கொழும்பு பிரதேசத்தில் துறை முகம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் வெற்றிகரமான பேச்சுக்கள் இடம்பெற்றன. இங்கு இடம்பெற்ற மற்றொரு முக்கியமான விடயமாக இருந்தது இலகு புகையிரத வேலைத் திட்டமாகும். இது அவர்களின் நீண்ட நாள் சலுகைக் கடன் வேலைத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். அத்தோடு எமது எதிர்பார்ப்புக்களினுள் முன்னேறுவதும் நோக்கமாக உள்ளது.தொழில்நுட்பத்தில் அபிவிருத்தி நிறைந்த ஜப்பானுடனான பேச்சுவார்த்தை இதன் போது இடம்பெற்றது. அத்தோடு நாம் முழுமையாகவே ரூபவாஹினியை டிஜிடல் முறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் ஜப்பானுடன் இணைந்து தொடர்ந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கின்றோம். இதில் பல்கலைக்கழங்களோடு 'சைன்டிபிக் எக்சேன்ஜ்' வேலைத்திட்டத்திலும் கலந்து கொள்வோம்.

மேலும் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான விடயத்தில் ஜப்பானின் ஒத்துழைப்பு உயர்ந்தளவில் எமக்கு கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரசியல் நடவடிக்கைகளின் போது விஷேசடமாக தெற்கு சீன கடலோர பிரச்சினையின் போது சர்வதேச ரீதியில் ஒற்றுமையுடன் பணியாற்றுவது தொடர்பில் இதன் போது பேசப்பட்டது.

வியட்னாம் நாட்டின் மீது கவனத்தைச் செலுத்தும் போது அந்நாடு மற்றும் இலங்கைக்கிடையிலான தொடர்புகள் மிக நீண்ட கால வரலாற்றினைக் கொண்டிருக்கின்றது. உலக அரிசி உற்பத்தியில் உயர் பங்களிப்பைச் செய்கின்றது. அபிவிருத்தியில் எமது நாட்டினை விட கீழ் மட்டத்திலிருந்த நாடாகும்.

எனினும் தற்போது அந்நாடு துரிதமான முன்னேறிக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக எடுத்துக் கொண்டால் கடந்த 10 வருட காலத்தினுள் இலங்கைக்கு அவர்களது ஏற்றுமதி தொகுதியில் புதிய ஏழு ஏற்றுமதி பொருட்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அதே காலப்பகுதியில் வியட்னாம் புதிதாக 45 பொருட்களை இணைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் கடந்த காலத்தினுள் வியட்னாம் எந்தளவிலான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொண்டால், வியட்னாம் கடந்த வருடத்தில் முதலீடுகளில் 20 பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றிருக்கின்றது. எமக்குக் கிடைத்திருப்பது அரை பில்லியன் டொலரேயாகும். வியட்னாம் எம்மை விட மிக விரைவாக உலகளாவிய உற்பத்தி வலையமைப்பினுள் இணைந்து கொண்டுள்ளமை இவற்றினால் தெரியவருகின்றது. அவ்வாறு உலகளாவிய உற்பத்தி வலையமைப்பில் இணைந்து கொள்வதால் எம்மால் உற்பத்திகளை மேற்கொண்டு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறே மற்றொரு உதாரணமும் உள்ளது.

அது ஐ போன் உற்பத்தி செய்யும் பொக்ஸ் கொன் நிறுவனத்தினால் ஸ்கிரீன் தயாரிப்பதற்காக ஒரு பில்லியன் டொலர் முதலீடு கிடைத்துள்ளதேயாகும்.

இங்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய இரு விடயங்கள் உள்ளன. அது அந்நாட்டு மக்களின் மனோநிலை விருத்தியாகும். இவ்வாறான ஒப்பந்தங்களின் போது அம்மக்கள் குறுகிய எண்ணங்கனோடு அதனைப் பார்க்கவில்லை.

பல்தேசிய கம்பனிகள் தமது நாட்டைப் பிடித்துக் கொள்வது போன்ற அச்சம் அவர்களிடத்தில் இருக்கவில்லை. இவ்வாறான ஒப்பந்தங்களினால் அந்நாடு உலகத்துடன் பலமான உறவுகளைக் கட்டியெழுப்பும் என அந்நாட்டு மக்களே கூறியிருந்தார்கள்.வியட்னாம் கொம்பியுனிஸ நாடாக இருந்தாலும் அது பாரம்பரிய கருத்துக்களை தோளில் சுமந்து கொண்டிருக்கும் நாடல்ல. அவர்கள் இன்று பார்ப்பது உலகின் ஏனைய நாடுகளுடன் தொடர்புபடுவதற்கேயாகும்.

எனினும் அவர்கள் அதிக கொடுக்கல் வாங்கலில் ஈடுபவது அமெரிக்காவுடனாகும். ஒரு முறை எமக்கு வியட்னாமின் அமைச்சர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னர் அவர்களிடம் அரசுக்குச் சொந்தமான முப்பதாயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் இருந்ததாக அவர் கூறினார்.

எனினும் இன்றிருப்பது முப்பதிற்கும் அண்மித்த நிறுவனங்களே என அவர் கூறினார். அவையும் இன்னும் குறுகிய காலத்தில் மாற்றமடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவர்களின் அபிவிருத்தியின் பின்னால் மனோநிலையில் இருக்கும் அபிவிருத்தியும் உள்ளதை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

வியட்னாம் மற்றும் இலங்கைக்கு இடையிலாக வர்த்தம் வரலாற்றில் உயர் மட்டத்தில் இருக்கவில்லை. எனினும் கடந்த 20 வருடங்களில் அது உயர்வடைந்துள்ளது. இதனடிப்படையில் 325 மில்லியன் டொலர் அளவில் அதிகரித்திருக்கின்றது. அடுத்த சில வருடங்களில் ஒரு பில்லியன் டொலர் வரையில் இதனை அதிகரிப்பதே பிரதமரின் எதிர்பார்ப்பாகும். அதற்குச் சாதகமான எதிர்பார்ப்புக்கள் எமக்குள்ளன.

இந்த இரண்டு நாடுகளும், அதாவது ஜப்பானும் வியட்னாமும் மிகப் பாரியளவிலான இரண்டு யுத்தங்களுக்கு முகங்கொடுத்தன. இந்த யுத்தம் காரணமாக இலட்சக்கணக்காவர்கள் உயிரிழந்தனர். எனினும் யுத்தத்தில் பாடம் கற்றுக் கொண்ட இவ்விரு நாடுகளும் வேகமான முன்னேறிக் கொண்டு செல்கின்றது. நாமும் அவ்வாறு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் இந்த நாடுகளை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறான ஏராளமான சலுகைகள் எமக்குக் கிடைக்கவுள்ளன. கடந்த காலத்தில் நாம் ஜப்பானை மறந்துவிட்டு செயற்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது. அது சீனாவுடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாலாகும். தற்போது அந்த நிலை முற்றாக மாறியிருக்கின்றது. எமது புதிய வெளிநாட்டுக் கொள்கைகளோடு நாம் ஒரு நாட்டுடன் மாத்திரமல்ல, அனைத்து நாடுகளுடனும் சிறந்த வெளிநாட்டு உறவுகளை பேணி வருகின்றோம்.

 

மலிக் சமிந்த தர்மவர்தன
தமிழில் : -எம்.எஸ்.முஸப்பிர்
(புத்தளம் விஷேட நிருபர்)


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...