மஹிந்த அணி ஆதரவாளர்களால் கல்வீச்சு; 23 பேருக்கு காயம் | தினகரன்

மஹிந்த அணி ஆதரவாளர்களால் கல்வீச்சு; 23 பேருக்கு காயம்

இன்று (07) காலை இடம்பெற்ற தெற்கு அபிவிருத்தி வலயத் திட்ட அடிக்கல் நடும் விழாவில் ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர்.
 
இலங்கை மற்றும் சீனா அரசினால் முன்னெடுக்கப்படும்  இத்திட்டம் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீனத் தூதுவரினால் குறித்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, இதில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
 
இதேவேளை, குறித்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்த ஆதரவு அணியினர் உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆதரவாளர்களால் நிகழ்வு ஆரம்பிக்கும் முன் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இவ்வேளையில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே நேற்றையதினம் (06) குறித்த நபர்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு, நீதிமன்ற தடையுத்தரவொன்றை பொலிஸார் பெற்றிருந்தனர்.
 
அதன் அடிப்படையில் குறித்த இடத்தின் பாதுகாப்புக்கருதி எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த பிரதேசத்தில் எவ்வித ஆர்ப்பாட்டங்களோ எதிர்ப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
 
அதனையும் பொருட்படுத்தாது மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து கலைப்பதற்கு பொலிசாரால், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.
 
குறித்த சம்பவத்தில் பொலிஸார் 11 பேர் உட்பட  23 பேர் காயமடைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சுமித் மனதுங்க தெரிவித்தார்.
 

Add new comment

Or log in with...