இறக்குமதி அரிசி காலாவதி; விலங்குத்தீனிக்கு

உள்ளூர் விவசாயிகளை கணக்கில் எடுக்காத கடந்த அரசின் செயல்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு கடந்த அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட இலட்சக் கணக்கான மெற்றிக்தொன் அரிசி காலாவதியாகி பாவனைக்குதவாமல் உள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உள்ளூர் விவசாயிகளைக் கணக்கிலெடுக்காது கடந்த அரசாங்கம் இறக்குமதி செய்துள்ள மேற்படி இலட்சக்கணக்கான மெற்றிக்தொன் அரசியை உலக உணவு நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பாவனைக்குதவாத அரசியை உலக உணவு நிறுவனத்துக்கு வழங்குவது முறையற்றது எனக்கூறி அவற்றை விலங்குத் தீனுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தாம் அமைச்சரவைக்குப் பணிப்புரை விடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கம் அபிவிருத்தி எதுவும் செய்யவில்லை என விமர்சிப்பவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, முதல் வருடத்தில் உலக நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளும்  வகையில் நாட்டில் சட்ட ரீதியான மற்றும் முக்கிய செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும் புதிய வருடத்தில் நாட்டில் வறுமையை ஒழித்து பொருளாதாரத்தில் நாட்டையும் மக்களையும் கட்டியெழுப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் தேவையறிந்து அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் தேவையற்ற அபிவிருத்திகளை மேற்கொண்டு நிதியை விரயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் மக்களினது அவசிய தேவைக்கு முக்கியத்துவமளிக்கும் என்றும் தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை வங்கிக் கிளையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

அமைச்சர் கபீர் ஹாசிம், இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க வடமத்திய மாகாண ஆளுநர், முதலமைச்சர் பேசல, இலங்கை வங்கி தலைவர் ரொனால்ட் பெரேரா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, விவசாயிகளுக்கு உரிய காலத்தில் உரம் கிடைக்கவில்லை என முறைப்பாடுகள் கிடைத்தன.

சில பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். நான் இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்ததில் நாட்டில் எந்த வித உரத்தட்டுப்பாடும் கிடையாது. உர களஞ்சியங்களிலும் உரத்தட்டுப்பாடு இல்லை. உர விநியோகத்தில் ஏற்பட்ட தாமதமே சில பகுதிகளில் உர தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்பதைக் கண்டறிய முடிந்தது.

உர விநியோகத்திலேயே குறைபாடுகள் உள்ளன. உடனடியாகவே நான் செயற்பட்டு அமைச்சுக்களின் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு தேவையானளவு உரத்தை தேவைப்படும் பிரதேசங்களுக்கு அனுப்புமாறு பணித்தேன்.

பொலன்னறுவையிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...