Home » மட்டக்களப்பில் இடம்பெற்ற ஐ.ம.ச. மகளிர் மாநாடு

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஐ.ம.ச. மகளிர் மாநாடு

- இவ்வருட இறுதிக்குள் பெண்களை வலுவூட்டும் திட்டங்கள்

by Rizwan Segu Mohideen
April 20, 2024 7:42 pm 0 comment

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் மாநாடு இன்று (20) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றியிருந்தார்.

இந்த வருட இறுதிக்குள் தமது ஆட்சியில் பெண்களுக்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், பெண்கள் சக்தியை அதிகரித்து வலுவூட்டி, பெண்கள் பங்களிப்பை வழங்கக் கூடிய திட்டங்களை வருட இறுதிக்குள் முன்னெடுக்கவுள்ளதாக, அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

மட்டகளப்பு மாவட்டம் உட்பட நாடளாவிய ரீதியிலான பெண் தலைமைத்துவ குடும்பங்களை வலுவூட்ட விசேட திட்டங்களை முன்னெடுப்பேன்.ஏனைய மாவட்டங்களைப் போலவே மட்டக்களப்பு மாவட்ட பெண்களும் நுண் நிதி கடன் வசதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நுண் நிதி கடன் பொறியில் இருந்து பெண்களை விடுவிக்கும் விசேட திட்டங்களை எமது ஆட்சியில் முன்வைப்போம். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் 14 பிரதேச செயலகங்கள் இருக்கின்றன. இந்த பிரதேச செயலகங்கள் ஊடாக பெண்களுக்கான சுய தொழில் முயற்சியாண்மைகளை ஏற்படுத்தி கொடுப்பது எனது நோக்கமாகும்.நாட்டில் வறுமை அதிகரித்துச் செல்லும் போது மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த வறுமை அதிகரித்து காணப்படுகிறது. எமது ஆட்சியில் வறுமை ஒழிப்புக்கான சமூக நலன்புரி திட்டங்களை பெண்களுக்கும் வழங்கி சமுதாய மட்டத்தில் இந்த வறுமையை நீக்க நடவடிக்கை எடுப்போம்.

ஏற்றுமதி உட்பட ஐந்து முக்கிய விடயங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம்.

நெசவுத் தொழில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களின் முக்கிய பிரச்சினை இந்தியாவில் இருந்து உற்பத்திக்கான நூலை அதிக விலை கொடுத்து எடுத்து வர வேண்டும்.சரியான விலை இல்லாத போது கறுப்புச் சந்தையில் அதிக விலை கொடுத்து நூலை கொள்வனவு செய்யும் நிலை இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருவோம்.

நளின் பண்டார அவர்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களையும் மையமாகக் கொண்டு ஏற்றுமதி மையங்களை ஆரம்பித்தார். அந்த திட்டத்தை நாம் எமது ஆட்சியில் மீண்டும் முன்தொடர்வோம்.

நுண்,சிறிய,நடுத்தர புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.எமது 10 இலட்சம் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டத்தில் பெண்களுக்கு கூடிய முக்கியத்துவதும் முன்னுரிமையும் வழங்க எதிர்பார்கிறோம்.

பெண்களுக்கான உரிமை,சமூக உரிமை மற்றும் பெண்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுப்போம். நான் ஜனாதிபதியாக வந்தால் பெண்களுக்கான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றினை ஸ்தாபிப்பேன். இலங்கையில் 52 % அதிகமாக பெண்கள் இருக்கின்றனர். இது அதிக எண்ணிக்கையாகும். உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரமே பெண்களுக்கான 25 % ஒதுக்கீடு இருக்கிறது. எனது ஆட்சியில் மாகாண சபைகளுக்கும் பாராளுமன்றத்திற்கும் பெண்களுக்கான 25 % ஒதுக்கீட்டை வழங்குவேன் என உத்தரவாதம் வழங்குகிறேன். இந்நாட்டுள்ள 314 பிரதேச செயலகங்களிலும் பெண்களை வலுவூட்டக் கூடிய மத்திய நிலையங்களை உருவாக்க நான் தயாராக இருக்கிறேன். அவ்வாறு இந்த திட்டத்தை ஆரம்பிக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நான் மீண்டும் வருவேன்.

மட்டக்களப்பு தொடர்பில் பேசும் போது குறிப்பாக மயிலத்தமடு மேய்ச்சல் தரை தொடர்பாக பேச வேண்டும். பல ஆட்சியாளர்கள் இங்கு வருகிறார்கள், இது குறித்து பேசுகிறார்கள். இந்த வருட இறுதிக்குள் எமது ஆட்சியில் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தருவேன் என உத்தரவாதம் அளிக்கின்றேன்.இந்த மேய்ச்சல் தரை தொடர்பாக சிறந்த உத்தரவாதம் வழங்கப்படும். இது விலங்குகளுக்கான உணவுக்கான சிறந்த இடமாக அமைந்து காணப்படுகிறது. இது மாத்திரமல்லாது மட்டக்களப்பு மாவட்டத்தில் சமயம் சார்ந்த இடங்கள்,தொல்லியல் சார்ந்த இடங்கள் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

இலங்கையில் சகல இனத்தவர்கள்,மத்த்தவர்கள் அனைவருமே வாழ்கிறார்கள். அனைவருக்கும் இடம் இருக்கிறது. அனைவருக்கும் சுதந்திரம் இருக்கிறது.அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய திட்டத்தை நாம் வழங்க வேண்டும்.எனவே இங்கு அனைத்து மதத்தினரையும் சமயத்தினரையும் ஓரிடத்துக்கு அழைத்து அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சிறந்த சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இனவாத நடவடிக்கைகளுக்கு இனம் சார்ந்து,மதம் சார்ந்து இடம் கொடுக்க முடியாது. இதற்கான உத்தரவாதத்தை மட்டகளப்பு மக்கள் தருவார்கள்.

மட்டகளப்பு மாவட்டத்தில் விவசாய உற்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேர்தல் வரும் போது பேசுவார்கள் 2024 தேர்தல் வருடமாகும். ஐக்கிய மக்கள் சக்தியிடமே இதற்கான தீர்வு இருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களுக்கும் விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம்.76 வருட சுதந்த இலங்கையில் எதிர்க்கட்சி அரசியலில் புதிய திருப்பங்களை ஐக்கிய மக்கள் சக்தியே ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியின் “மூச்சு” மற்றும் “பிரபஞ்சம்” திட்டங்கள் ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலைகளுக்கும் பாடசாலைகளுக்கும் கோடிக்கணக்கான தொகையை வழங்கியுள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தி எந்த தரப்புக்கும் பயப்பட்ட கட்சியல்ல. ஆனால் அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு அஞ்சுகிறது. மே 1 ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட நாம் கோரிய மைதானத்தை வேறு தரப்புக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐக்கிய மக்கள் சக்திக்கு அரசாங்கம் பயப்படுகிறது. ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு பயப்படுகிறது. அரசாங்கத்திற்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம், மே தினத்துக்கான இடத்தை அரசாங்கம் கொடுத்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு இலட்சம் தொழிலாளர்களை கொழும்புக்கு அழைத்து வந்து மக்கள் சார் தொழிலாளர் தினத்தை, தொழிலாளர் புரட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டாடும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் உங்களுக்கு சுபிட்சமான எதிர்காலத்தை உருவாக்கித் தருவோம் என்ற உத்தரவாத்த்தை வழங்கி விடை பெறுகிறேன்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT