Home » நாலாவது பெரிய புதுப்பிக்கத்தக்க சக்தி வள நாடாக திகழும் இந்தியா

நாலாவது பெரிய புதுப்பிக்கத்தக்க சக்தி வள நாடாக திகழும் இந்தியா

- உலக வங்கி செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர்

by Rizwan Segu Mohideen
April 20, 2024 7:44 pm 0 comment

உலகளாவிய சூரிய சக்தி உற்பத்தி திறன்களில் மூன்று சதவீதத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்தியா, உலகின் நான்காவது பெரிய புதுப்பிக்கத்தக்க சக்தி வள நாடு என்று உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா ப்ஜேர்டே தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் செய்த உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர், தமிழ்நாடு மாநிலம் உட்பட பல பிரதேசங்களுக்கும் நேரில் சென்று இந்தியாவின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

அதனடிப்படையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அவர், கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்துறையில் இந்தியா முதலீடு செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பெரிய அளவில் பொது முதலீட்டைக் கொண்டுள்ள இந்தியா, உலகில் வளர்ந்து வரும் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது.

இதேவேளை உலக வங்கி சுமார் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் சூரியசக்தி பூங்கா போன்ற திட்டங்களில் 40 மடங்கு வர்த்தக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இன்றைய இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 42 சதவீதமானவை புதுப்பிக்கத்தக்க சக்தியிலானவை. மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் இந்தியா, சக்தி வள மாற்றத்தின் அடுத்த கட்டத்திற்குள் பிரவேசிக்கத் தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு கடந்த நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சியை இந்தியா பெற்றுக்கொள்ளும் என மதிப்பிடப்பட்டிருந்த போதிலும் பொது முதலீடுகளால் தான் முன்னேற்றங்கள் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவின் எதிர்காலத்தைத் தனியார்த்துறையே வடிவமைப்பதாக விளங்குகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT