Monday, May 20, 2024
Home » ஒன்லைன் கடன்: போலிப் பிரசாரம் செய்ததாக 3 செயற்பாட்டாளர்கள் மீது வழக்கு

ஒன்லைன் கடன்: போலிப் பிரசாரம் செய்ததாக 3 செயற்பாட்டாளர்கள் மீது வழக்கு

by Rizwan Segu Mohideen
April 8, 2024 1:52 pm 0 comment

டிஜிட்டல் மற்றும்  ஒன்லைன்  ஊடாக  கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் தவறான கருத்துகளை  இணையத்தில் வெளியிட்ட  மூன்று சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக  அத்தனகல்ல மாவட்ட நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் ஆல்டர்நேட்டிவ் லெண்டிங் அசோசியேஷன் (DALA) சங்கத்தில் உள்ள நிறுவனங்களால் இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளதோடு வியங்கொடை, கம்பளை, மஹவயைச் சேர்ந்த மூவருக்கு எதிராகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

DALA நிறுவனத்தைச் சேர்ந்த A V Business Solutions – Cashஸ், Fintech Software Solutions – Loanme, Zephyr Solutions (Pvt) Ltd. – Lotus Loan), (Oncredit) ஸ் F Group-Fino.lk ஆகிய நிறுவனங்களே இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளன.

பிரதிவாதிகளிடம் இருந்து 4250 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு அமுலில் உள்ள சட்டத்திற்கு அமைவாக ஒன்லைன் ஊடாக கடன் வழங்கும் மேற்படி நிறுவனங்களுக்கு எதிராக பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களில் பிரதிவாதிகள் பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை  வெளியிட்டுள்ளதாக மனுக்களில் குறிப்பிடப்பட் டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு பிரதிவாதியிடம் இருந்தும் தலா 500 மில்லியன் ரூபா வீதம் கோரப்பட்டுள்ளதோடு இது வரை மேற்கொண்ட சேதத்திற்காக 350 மில்லியன் ரூபா  நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது. சுதத் பெரேரா சட்ட நிறுவனத்தின் ஊடாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுதாரர்கள் போலந்து, கசகஸ்தான், உக்ரைன், செக் குடியரசு, ரூமேனியா, ஸ்பெயின், மோல்டோவா, வியட்நாம், பிலிபீன்ஸ், கென்யா, இந்தியா, மெக்சிகோ, நைஜீரியா, கொலம்பியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிலும் செயற்பட்டு வருவதோடு  சட்டரீதியாகச் செயற்படும் வர்த்தகத்திற்கு எதிராக சட்டவிரோதமாக திட்டமிட்டு பிரசாரம்  மேற்கொள்ளும் பிரதிவாதிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்குமாறும் பிரதிவாதிகளுக்கு தொடர்ந்தும் செயற்பட தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

மனுவை ஆராய்ந்த  அத்தனகல்ல மாவட்ட நீதவான் கேசர சமரதிவாகர, பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT