Wednesday, May 8, 2024
Home » IPL 2024 CSK vs GT: தோனியின் ஆட்டத்திற்காக இரசிகர்கள் காத்திருப்பு

IPL 2024 CSK vs GT: தோனியின் ஆட்டத்திற்காக இரசிகர்கள் காத்திருப்பு

- இப்போட்டியில் மதீஷ பத்திரண களமிறங்குவாரா ?

by Prashahini
March 26, 2024 9:35 am 0 comment

IPL T20 கிரிக்கெட் தொடரில் இன்று (27) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸுடன் மோதுகிறது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. அந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முஸ்டாபிஸூர் ரஹ்மான் அற்புதமாக செயல்பட்டிருந்தார். சுழற்பந்து வீச்சாளர்களில் ஜடேஜா ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.

இவர்களை தவிர்த்து மற்ற பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களை வீசி 47 ஓட்டங்களை தாரைவார்த்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள தீபக் சாஹரின் பந்து வீச்சும் அழுத்தம் கொடுக்கவில்லை. சுழற்பந்து வீச்சில் தீக்சனா 4 ஓவர்களை வீசிய நிலையில் ஓவருக்கு சராசரியாக 9 ஓட்டங்களை தாரைவார்த்தார். இதனால் பெங்களூரு அணி கடைசி 8 ஓவர்களில் 95 ஓட்டங்களைவேட்டையாடி இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்படுவதில் CSK அணி தீவிரம் காட்டக்கூடும்.

துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்ய ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். இவர்கள் மீண்டும் ஒருங்கிணைந்த செயல் திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் 2ஆவது வெற்றியை பதிவு செய்யலாம். முதல் ஆட்டத்தில் ஷிவம் துபே ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஓட்டங்கள் சேர்க்க தடுமாறினார். இந்த விஷயத்தில் அவர், தனது திறனை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தக்கூடும்.

முதல் ஆட்டத்தில் தோனி, சமீர் ரிஸ்வி ஆகியோருக்கு பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அது இரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடும். இது ஒருபுறம் இருக்க இலங்கையின் மதீஷ பத்திரண முழு உடற்தகுதியை எட்டியுள்ளார்.

இதனால் இறுதிக்கட்ட பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக பதிரன களமிறக்கப்படக்கூடும். அவர், களமிறங்கும் பட்சத்தில் தீக்சனா தனது இடத்தை இழக்கக்கூடும். ஏனெனில் ரச்சின் ரவீந்திரா சுழற்பந்து வீச்சில் பிரதான வீரராக செயல்படும் திறன் கொண்டவர். மேலும் துஷார் தேஷ்பாண்டேவுக்கு பதிலாக முகேஷ் சவுத்ரி சேர்க்கப்படக்கூடும். ஆனால் CSK அணியை பொறுத்த வரையில் ஒரே ஆட்டத்தில் அதிக மாற்றங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்பு குறைவே.

குஜராத் டைட்டன்ஸ் அணியும் தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. அந்த அணி தனது சொந்த மைதானத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் குஜராத் அணி சிறப்பாக செயல்பட்டிருந்தது. கடைசி 5 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 43 ஓட்டங்கள் தேவையாக இருந்த நிலையில் மோஹித் சர்மா, ரஷித் கான், ஸ்பென்சன் ஜான்சன், உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர்.

முன்னதாக நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதற்கு உதவினார். 4 ஓவர்களை வீசிய அவர், ஒரு விக்கெட்டை கைப்பற்றி 24 ஓட்டங்களை மட்டுமே வழங்கினார். துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் டாப் ஆர்டரில் ஷுப்மன் கில், ரித்திமான் சாஹா ஆகியோர் தங்களுக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினர். 45 ஓட்டங்கள் சேர்த்த சாய் சுதர்சன், இறுதிக்கட்டத்தில் மட்டையை சுழற்றிய ராகுல் டெவாட்டியா ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

டேவிட் மில்லர், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோர் மிடில் ஆர்டரில் வலுசேர்க்கக்கூடும். சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கக்கூடியது என்பதால் ரஷித் கான், சாய் கிஷோர் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு உள்ளது.

சேப்பாக்கத்தில் கடந்த முறை..

கடந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது சிஎஸ்கே. அந்த ஆட்டத்தில் 173 ஓட்டங்கள்இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 157 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த ஆட்டத்தில் 60 ஓட்டங்கள் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட் ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார்.

IPL தொடரில் இதற்கு முன்னர் CSK – குஜராத் அணிகள் 5 முறை மோதி உள்ளன. இதில் குஜராத் 3 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளன. இந்த 3 ஆட்டத்தில் குஜராத் அணி இலக்கை துரத்தியே வெற்றி கண்டிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT