Home » அபிவிருத்திக்காக மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்

அபிவிருத்திக்காக மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்

by Prashahini
March 16, 2024 7:57 pm 0 comment

அஸ்வெசும நலன்புரிக்காக 183 பில்லியன் ரூபாய்
– அனைத்து பிரதேச செயலகத்திலும் நவீன விவசாயப் பொருளாதாரம் உருவாக்கப்படும்
– தொழிற்படையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத் திட்டம்

அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கும் நிதியை உரிய முறையில் செலவழித்து அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி, மக்களுக்கு நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பிரதேச செயலாளர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், மக்களுக்காக அமுல்படுத்தப்படும் “அஸ்வசும” “உருமய”, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம், “கந்துரட்ட தசகய” வேலைத் திட்டம் ஆகியவற்றின் வெற்றிக்கு தீவிரமாகப் பங்களிக்குமாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, இந்த அனைத்து வேலைத் திட்டங்களின் பலன்களும் தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும், பிரதேச செயலாளர்களுடனும் நேற்று (15) காலை கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

“வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை – 2024” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

“அஸ்வெசும” வேலைத் திட்டத்தின் கீழ் 2 மில்லியன் பேர் பயனடைவதுடன் அந்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனாக அதிகரிக்கப்படும். அதற்காக 183 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

மேலும், 20 இலட்சம் குடும்பங்களுக்கு “உருமய” நிரந்தர காணி உறுதிகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களிலும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் 11,250 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

“கந்துரட்ட தசகய” வேலைத் திட்டத்தை 11 மாவட்டங்களிலும், 93 பிரதேச செயலகப் பிரிவுகளிலும், 4,401 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக 26 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இரண்டாம் கட்டமாக 75 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்டுள்ள அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு இந்த நிதிகளை முறையாகச் செலவிட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நவீன விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொழிற்படையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னர், இந்த ஆண்டு 2024 இல் மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்ட எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டது. அதன் பின்னர் கொவிட் தொற்றினால், 2022 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமாகக் குறைந்தது. எனினும், பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதாரத்தை சீர்செய்ய முடிந்தது. 2024ஆம் ஆண்டில் 2% பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு 2% வளர்ச்சியை எட்டினாலும், 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலையை அடைவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். இருப்பினும், 2027 அல்லது அதற்கு முன்னதாக அந்த இலக்கை அடைய வேண்டும் என்று நான் இலக்கு வைத்துள்ளேன். 2022ஆம் ஆண்டு நான் நாட்டைப் பொறுப்பேற்ற போது நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்திருந்தது. இதன்போது சிறுபோகத்தை வெற்றிகரமாக செய்வதற்கு முன்னுரிமை கொடுத்தேன். அதன் பின்னர் பெரும்போகத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. அப்போது எங்களிடம் பணம் இருக்கவில்லை. உலக உணவு அமைப்பின் மூலம் 36,000 மெட்ரிக் தொன் உரத்தை அமெரிக்கா எங்களுக்கு வழங்கியது. இந்தியாவில் இருந்து 40,000 மெட்ரிக் தொன் யூரியா வழங்கப்பட்டது. உலக வங்கியிடமிருந்து 135,000 மெட்ரிக் தொன் உரம் கிடைத்தது. இதனாலேயே சிறுபோகத்திலும், பெரும்போகத்திலும் சிறந்த முறையில் விவசாயம் செய்ய முடிந்தது.

தற்போது நிலைமை சீராகி வருகிறது. அடுத்த 10-15 ஆண்டுகளில் நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே எங்கள் நோக்கம். எவ்வாறாயினும், தற்போது நிவாரணம் தேவைப்படும் மக்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, நாங்கள் வழங்கும் பணத்தின் அளவை அதிகரித்துள்ளோம். பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த திட்டத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். அந்தக் குறைகளை இந்த வருடம் சரி செய்து கொண்டு நாம் முன்னேற வேண்டும்.

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நாங்கள் வழங்கும் பணம் அனைத்தும், நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் சேர்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் அந்த பணத்தை அன்றாட தேவைகளுக்காக செலவிடுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு இந்த பணம் நாட்டின் பொருளாதாரத்தில் சேர்க்கப்படும். மேலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். இதனால் தனியார் துறையிலும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகிறது. பெருந்தோட்டத் துறையினருக்கும் சம்பள அதிகரிப்ப வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பின் பலனை பொருளாதாரம் பெறுகிறது.

கடந்த காலத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகத்தர்கள் நட்டத்தை எதிர்கொண்டனர். எனினும், அவர்களுக்கும் தற்போது நிலுவைப் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணம் மீண்டும் பொருளாதாரத்தில் சேரும்.

அத்துடன் நாங்கள் “கந்துகர தசகய” எனும் மலையக தசாப்தம் என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். மலையகப் பகுதிகள் இன்னமும் முறையாக அபிவிருத்தி செய்யப்படவில்லை. அதற்கான பணத்தை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இந்த பணம் செலவழிக்கப்படும்போது, அது நாட்டின் பொருளாதாரத்தில் சேர்க்கிறது.

எனவே, அரசு வழங்கும் இந்தப் பணத்தை எல்லாம் முறையாகச் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த பணத்தை சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அப்போது இந்தப் பணம் நாட்டின் பொருளாதாரத்தில் சேர்க்கப்படும்.

மேலும், மக்களுக்கு இலவச நில உரிமை வழங்கும் “உருமய” திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதன் மூலம் மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதன்படி முதற்கட்டமாக 10 இலட்சம் பேருக்கு காணி உரிமை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பிரச்னைகள் உள்ள இடங்களில், பிரச்னைகளைத் தீர்த்து, பணிகளை செயல்படுத்த வேண்டும். மேலும், மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பொருளாதாரத்தையே நாம் தொடர முடியாது. நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகின்றது. நிலுவையில் உள்ள கடன்களுக்கு கால அவகாசம் கோரியுள்ளோம். இங்கு நமது ஏற்றுமதியை விட இறக்குமதிகள் அதிகமாக இருக்கிறது. இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையே உள்ள இடைவெளியை ஈடுசெய்ய ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்க வேண்டும். இதனைத் தவிர்க்க வேண்டுமாயின் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

கடந்த பொருளாதார நெருக்கடியின் போது நாம் அனைவரும் பாதிக்கப்பட்டோம். அந்த நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாம் எடுத்துள்ள இந்த முயற்சிகளினால் எந்த பயனும் கிடைக்காமல் போய்விடும். எனவே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

நாங்கள் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வருகிறோம். இந்த டிசம்பர் மாதத்திற்குள் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் உள்ள பொருளாதாரத்தின்படி ஆடைத் தொழில் மீது பெரிய நம்பிக்கை வைக்க முடியாது. எனவே விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நாம் சிங்கள மன்னர் காலத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சி முடியும் வரை விவசாயத்தில் ஈடுபட்ட நாடு. அப்போது நமது விவசாய ஏற்றுமதி வலுவாக இருந்தது. அந்த நிலைக்கு நாம் திரும்ப வேண்டும்.

விவசாயத்தை நவீனமயப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அதற்காக 26 பிரதேச செயலகங்களைத் தெரிவு செய்துள்ளோம். கமநல சேவை அலுவலகங்கள் விவசாய நவீனமயமாக்கல் அலுவலகங்களாக மாற்றப்படும். அனைத்து விவசாயத் துறைகளும் ஒரு அமைச்சின் கீழ் செயற்பட வேண்டும். மேலும், நெல் விளைச்சலைப் பெற திட்டமிட்டுள்ளோம். விவசாய நவீனமயமாக்கல் திட்டம் எதிர்காலத்தில் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இலங்கையில் உள்ள 341 பிரதேச செயலகங்களில் எத்தனை பிரதேச செயலகங்களில் இருந்து நாம் அந்நிய செலாவணி பெறுகின்றோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எனவே ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நவீன விவசாய பொருளாதாரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், தொழிற்பயிற்சி நிலையங்களில் இணைந்து, தொழிற்கல்லூரிகளை நிறுவி, தொழில் பயிற்சியை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அடிப்படையில், சுற்றுலா மற்றும் விவசாய மேம்பாட்டுத் திட்டங்களை முன்னேற்றுவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம். கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்குப் பின்னர், வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்று புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக திருகோணமலை, அம்பாந்தோட்டை, இங்கிரிய, கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களை அடையாளம் கண்டுள்ளோம். தென் மாகாணம் மற்றும் கிழக்கு மற்றும் மலையகம் ஆகியவற்றில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதே எங்கள் நோக்கம். இந்த அனைத்து நடவடிக்கைகளுடனும் நாம் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன,

”இந்த இடத்தில் அனுபவமுள்ள அரச அதிகாரிகள் குழு உள்ளது. அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் தீர்மானங்களையும் திட்டங்களையும் தொடர்ச்சியாக அமுல்படுத்தும் குழு என்றே கூறவேண்டும். ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவத்தின் ஊடாக நாடு இன்று முன்னோக்கி வந்துள்ளது. அரச அதிகாரிகளாகிய நீங்களும் நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து பெருமைப்படலாம். ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்று நாட்டிற்கு வருகின்றனர். அவர்களுக்கும் நாட்டின் மீது நம்பிக்கை உள்ளது. கிராமத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க உங்கள் உதவி தேவை. வன்முறையற்ற நிர்வாகத்தைக் கொண்டு செல்லும் பொறுப்பும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அன்று 1971 கிளர்ச்சியின்போது, பிரதேச செயலாளர்கள் வெளியேற வேண்டியிருந்தது. நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் படிப்படியாகத் தீர்க்க ஒரு அரசாங்கமாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளோம். இந்த அரச பொறிமுறையில் உங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளை உண்மையாக நடைமுறைப்படுத்துவதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் உங்கள் அனைவரது வலிமையும் உறுதியும் வேண்டும்” என்று பிரதமர் தெரிவித்தார்.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த,

”நாட்டின் அனைத்து அரச அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன் இதுபோன்ற கூட்டம் நடந்ததில்லை. கடந்த காலங்களில் நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அந்தச் சவால்களை முறியடிக்கும் வகையில் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உங்கள் அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

அன்று நாம் இருந்த நிலையை மறந்துவிடக் கூடாது. கடந்த நெருக்கடியான காலத்தில், நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலைத்திட்டத்தில் நீங்கள் இரவும் பகலும் சிறந்த சேவையைச் செய்தீர்கள். மேலும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க உங்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்குத் தேவை. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை ஜனாதிபதி அதிகரித்தார். உருமய வேலைத்திட்டம் மக்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் சலுகைகள் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். விருதுகள், கௌரவங்கள் பெற வேண்டுமானால் நேர்மையாக மக்கள் சேவை செய்ய வேண்டும். கடந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ஜனாதிபதி மாத்திரமன்றி அமைச்சர்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி இந்த நாட்டைப் பொறுப்பேற்று பாராளுமன்றத்தை போராட்டக்காரர்களிடமிருந்து காப்பாற்றாவிட்டால் அரச அதிகாரிகளின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் என்பதைக் கூற வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.

கேள்வி :

”அஸ்வெசும பெற தகுதியானவர்கள் உள்ள போதிலும், முதல் கட்டத்தில் பதிவு செய்யப்பட்டதால் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை. அவர்களுக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும்?”

பதில் – நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன

”முதற்கட்டமாக விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்பு தரவு அமைப்பில் உள்வாங்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. முன்னர் கொடுக்கப்பட்ட தரவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பயனாளிகளைத் தேர்வு செய்த பின் அது செய்யப்படும். அவர்களுக்கு ஒரு போதும் பிரச்சினை ஏற்படாது.”

இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த,

”இது குறித்து தலைவர் உரிய விளம்பரம் செய்ய வேண்டும். இது அடிமட்ட பிரச்சினை. நீங்கள் குறிப்பிடுவது போல் இரண்டு சூழ்நிலைகள் இருப்பதை அறியாதவர்களும் இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்பது சமூகத்திற்கு அனுப்பப்பட்ட செய்தியாக உள்ளது.”

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”சிங்களத்திலும் தமிழிலும் சுவரொட்டிகளை அச்சிட்டு காட்சிப்படுத்துவதே சிறந்த தீர்வாகும். அப்போதுதான் அனைவரும் இதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.” என்று தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (விவசாய உற்பத்தி மற்றும் காணி) சந்திரா ஹேரத், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (உணவு பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி) வர்ணன் பெரேரா, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் கே. எம். எம். சிறிவர்தன, விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் பி. எல். ஏ. ஜே. தர்மகீர்த்தி, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச். எம். பி. பி. ஹேரத், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் சமன் தர்ஷன படிகோரள, காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க, சேர்வே ஜெனரால் டபிள்யூ. சுதத் பெரேரா, இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம். எல். டி. சி. எம். அபேகுணவர்தன, நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன, மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT