Thursday, May 9, 2024
Home » கோபா குழு தலைவர் பதவிக்கு லசந்த தெரிவு

கோபா குழு தலைவர் பதவிக்கு லசந்த தெரிவு

- கோப் குழு தலைவராக ரோஹித நியமனம்

by Prashahini
March 7, 2024 3:53 pm 0 comment

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கோபா குழுவின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் இன்று (07) இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது, லசந்த அழகியவண்ணவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வழிமொழிந்தார்.

இதன்போது குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் புதிய தலைவர் வருகை தந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன், குழுவின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, பிரசன்ன ரணவீர, டயனா கமகே, சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, வஜிர அபேவர்தன, ஏ.எல்.எம். அதாஉல்லா, நிரோஷன் பெரேரா, அஷோக் அபேசிங்க, ஜயந்த கெடகொட, எஸ். சிறீதரன், ஹெக்டர் அப்புஹாமி, எம். உதயகுமார், (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கருணாதாச கொடிதுவாக்கு, இசுறு தொடங்கொட, முதிதா பிரசாந்தி, சஹன் பிரதீப் விதான, மதுர விதானகே, வீரசுமன வீரசிங்க, மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

கோப் குழு தலைவராக ரோஹித அபேகுணவர்தன
– தலைவர் பதவிக்கு உறுப்பினர் காமினி வலேபொடவின் பெயரும் முன்மொழிவு

இதேவேளை, கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் கோப் குழு முதல்தடவையாக இன்றையதினம் (07) கூடியபோதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தனவின் பெயரும் காமினி வலேபொடவின் பெயரும் முன்மொழியப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன அதனை வழிமொழிந்தார்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரோஹித அபேகுணவர்தன மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார்.

குழுவின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குழுவில் தெரிவித்தார். அத்துடன், எந்தவித அரசியல், கட்சி பேதங்களும் இன்றி ஒரே குழுவின் உறுப்பினர்களாக அனைவருடனும் பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் கோப் குழுவின் உறுப்பினராக செயற்பட்ட போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள் ஊடாக அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோப் குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பான முன்னேற்றம் பற்றி கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும், பரிந்துரைகளை செயற்படுத்தாத நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் நிலையியற் கட்டளைகளை திருத்துவதன் தேவையையும் குழுவின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புற, லொஹான் ரத்வத்த, இந்திக அனுருத்த ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர திசாநாயக்க, ரவுப் ஹக்கீம், டிலான் பெரேரா, மஹிந்தானந்த அளுத்கமகே, இரான் விக்ரமரத்ன, நளின் பண்டார ஜயமஹ, ஹேஷா விதானகே, சஞ்சீவ எதிரிமான்ன, ஜகத் குமார சுமித்ராறச்சி, மேஜர் சுதர்ஷன தெனிபிடிய, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, எம். ராமேஸ்வரன், காமினி வாலேபொட, ராஜிகா விக்ரமசிங்க, மதுர விதானகே, (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT