Monday, April 29, 2024
Home » பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் சமீர இல்லை, நிஸ்ஸங்கவும் சந்தேகம்

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் சமீர இல்லை, நிஸ்ஸங்கவும் சந்தேகம்

by damith
February 26, 2024 8:19 am 0 comment

பங்களாதேஷுக்கு எதிராக அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் இருந்து உபாதைக்கு உள்ளாகி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர நீக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆப்கானுடனான தொடரில் ஆடிய அதே மாற்றமில்லாத குழாமை அறிவிக்க தேர்வுக் குழுவினர் தீர்மானித்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். எனினும் சமீரவுக்கு குறைந்தது நான்கு வாரங்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார கடைசியில் பங்களாதேஷ் செல்லும் இலங்கை அணி அங்கு மூன்று ரி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. ரி20 போட்டிகளுடன் ஆரம்பமாகும் இந்தத் தொடரில் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

எவ்வாறாயிலும் ஆப்கானுடனான ஒருநாள் தொடரின்போது உபாதைக்கு உள்ளான சமீர, பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை இழந்துள்ளார். சமீரவுக்கு பதில் அசித்த பெர்னாண்டோவை அழைக்க தேர்வுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் சமீரவுக்கு மாற்று வீரராக அழைக்கப்பட்டிருந்தார். இதேநேரம் ஆப்கானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியின்போது அதிரடி அரைச்சதம் பெற்ற பின் காயத்திற்கு உள்ளான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கு தயாராவார் என்று தேர்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பத்தும் தொடை எலும்புக் காயத்திற்கு உள்ளான நிலையில் நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) இலங்கை இரு பயிற்சி முகாம்களை நடத்தவிருப்பதோடு அதன்போது பத்துமின் உடல் தகுதி குறித்து மதிப்பீடு செய்யப்படவுள்ளது.

இதேவேளை ஆப்கானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நடுவருடன் முரண்பட்டு நடத்தை விதியை மீறியதால் போட்டித் தடைக்கு உள்ளான இலங்கை ரி20 அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு பங்களாதேஷுக்கு எதிரான முதல் இரு ரி20 போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT