Home » ‘நோபோல்’ வழங்காத நடுவரை வேறு வேலை தேடும்படி ஹசரங்க அறிவுரை

‘நோபோல்’ வழங்காத நடுவரை வேறு வேலை தேடும்படி ஹசரங்க அறிவுரை

நடுவரின் முறைப்பாட்டால் நெருக்கடி

by Gayan Abeykoon
February 23, 2024 6:00 am 0 comment

ப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 சர்வதேச போட்டியின் பரபரப்பான கடைசி ஓவரில் உயர வந்த பந்துக்கு “நோ போல்” வழங்காத நடுவர் லைடன் ஹனிபல், வேறு வேலை தேடிக்கொள்வது நல்லது என்று இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.  

ரங்கிரி தம்புள்ளையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்கொயர் லெக் நடுவராக இருந்த ஹனிபல், வபா மொமான்ட் கடைசி ஓவரில் வீசிய பந்து புல்டோஸ் பந்தாக கமிந்து மெண்டிஸின் இடுப்புக்கு மேலால் சென்றபோதும் நோபோல் பிடிக்கத் தவறியதை அடுத்தே இந்தக் கருத்தை வெளியிட்டார்.

“இவ்வாறான விடயங்கள் சர்வதேச போட்டிகளில் நடைபெறக் கூடாது. (இடுப்புக்கு) நெருக்கமாக பந்து சென்றிருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அந்தப் பந்து உயரமாகச் சென்றது. இன்னும் சற்று உயரமாகச் சென்றிருந்தால் துடுப்பாட்ட வீரரின் தலையை தாக்கி இருக்கும்.

அதனை பார்க்க முடியாவிட்டால், அந்த நடுவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பொருத்தமாக இருக்க மாட்டார். அவர் வேறு வேலையை தேடுவது நன்றாக இருக்கும்” என்று போட்டிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஹசரங்க குறிப்பிட்டார்.

கடைசி மூன்று பந்துகளில் வெற்றிபெற இலங்கை அணிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்படும்போதே இது நிகழ்ந்தது.

அந்தப் பந்தை நடுவர் சரியானது என கருதிய நிலையில் துடுப்பெடுத்தாடிய கமிந்து நடுவரிடம் நோபோல் கேட்டார். எனினும் நடுவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

தொடர்ந்து கடைசிப் பந்தில் கமிந்து சிக்ஸர் ஒன்றை விளாசியபோதும் இலங்கை அணி இந்தப் போட்டியில் 3 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. எனினும் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரை இலங்கை அணி 2–1 என கைப்பற்றியது.

இந்நிலையில் நடுவரை விமர்சித்தது தொடர்பில் வனிந்து ஹசரங்க சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முகம்கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஹசரங்கவின் நடத்தை குறித்து நடுவர் ஹனிபல் போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஹசரங்காவின் நடத்தை, ஐ.சி.சி நடத்தை விதிகளின் கீழ் அவருக்கு எதிராக 2ஆம் நிலை குற்றச்சாட்டிற்கு வழிவகுத்துள்ளது. முந்தைய குற்றத்திற்கு ஹசரங்கவுக்கு இரு தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டி20 சர்வதேச போட்டிகளில் இடைநிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.சி.சி. இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்காதபோதும், ஹசரங்க குறிப்பிடத்தக்க விளைவுகளை எதிர்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT