சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் இமாம் முஹம்மது பின் சுஊத் அவர்களால் நிறுவப்பட்ட சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் இன்றாகும். சவூதி அரேபியா வரலாறு நெடுகிலும் பல எழுச்சிகளைக் கடந்து ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை அடைந்து இன்று உலகின் தன்னிகரற்ற சக்தியாகவும் பல துறைகளில் முன்னோடியாகவும் திகழும் நாடாக பரிணமித்துள்ளது.
இது சாத்தியமானதற்குக் சவூதி அரேபியாவை ஆட்சி செய்த தலைசிறந்த, தூர நோக்குடைய ஆட்சியாளர்களே காரணம் ஆவர்.
இன்றைய நவீன உலகில் தன்னை சகலவிதமான துறைகளிலும் வலுப்படுத்திக் கொண்டுள்ள சவூதி அரேபியா மிகப்பெரும் பொருளாதார சக்தியாகவும் விளங்குகின்றது. இவ்வளவு உயர்வை அடைந்த சவூதிக்கு உலகில் கஷ்டப்படும் மக்களின் துயர் துடைப்பதிலும் மிகப்பெரும் வகிபாகம் உள்ளதை எவராலும் மறுக்க முடியாது.
உலகநாடுகளுக்கு மனிதநேய உதவிகள் செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் இடங்களுக்குள் சவூதி அரேபியாவும் உள்ளது. அதுமட்டுமல்லாது அதன் உதவியானது மிகத்துல்லியமாகவும், திறமையாகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கீழ்வரும் அம்சங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றமை விஷேட அம்சமாகும்.
-கஷ்டப்படுபவர்கள், அனர்த்தங்களால் பாதிக்கப்படுவோருக்கான உதவிகள் செய்வதைத் தொடர்தல், -இனமத, மொழி வேறுபாடுகளைக் கடந்து உதவிகள் செய்தல், -நம்பகமான சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயற்படல் மற்றும் ஆலோசனை செய்தல், -நிவாரணப் பணிகளில் சர்வதேச விதிமுறைகளைப் பேணல், -உதவிகள் தகுதியானவர்களைச் சென்றடைவதையும் அது வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்தல்.
இவை போன்ற விதிமுறைகள் மூலம் சவூதி அரேபியா வெளிநாட்டு மக்களுக்கு உதவிகள் செய்வதில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது.
உலகின் நாலாபுறங்களிலும் சவூதி அரேபியா செய்யும் உதவிகளின் பெறுமதியை அறிந்து கொள்ள மன்னர் சல்மான் நிவாரண நிலையத்தின் செயற்பாடுகள் மட்டும் போதுமானது. 2015 ஆம் ஆண்டு மன்னர் சல்மான் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட குறித்த நிலையம் இதுவரை சுமார் 92 நாடுகளில் 2402 பெரும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதில் அதிகூடிய உதவிகளைப் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை நாடு 18 ஆவது இடத்தைப் பெறுகின்றது.
அந்த நிலையத்தினூடாக இலங்கை 13 அபிவிருத்திப் பணிகளுக்காக சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றிருக்கின்றது. அதேநேரம் அபிவிருத்திக்கான சவூதி நிதியம் இலங்கையின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்காக சுமார் 430 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவின் இவ்வுதவிகள் நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவையாகும். சவூதி அரேபியா மேலும் பல வளர்ச்சிகளுடன் அபிவிருத்திப் பாதையில் பயணித்து உலகில் கஷ்டப்படும் மக்களுக்கு வாரி வழங்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அபூ அரீஜ் பாகிர்