Thursday, May 2, 2024
Home » ஆப்கானுக்கு எதிரான டி20 தொடரையும் வெல்லும் எதிர்பார்ப்புடன் இலங்கை அணி இன்று களத்தில்

ஆப்கானுக்கு எதிரான டி20 தொடரையும் வெல்லும் எதிர்பார்ப்புடன் இலங்கை அணி இன்று களத்தில்

by damith
February 19, 2024 6:00 am 0 comment

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் த்ரில் வெற்றியீட்டிய இலங்கை அணி டி20 தொடரையும் கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இன்று இரண்டாவது போட்டியில் களமிறங்கவுள்ளது.

ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் கடந்த சனிக்கிழமை (17) நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில் அதனை காத்துக்கொள்ள கடைசி ஓவர் வரை போராட வேண்டி இருந்தது.

இதன்போது கடைசி இரண்டு ஓவர்களுக்கும் 14 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் 19ஆவது ஓவரை வீச வந்த மதீஷ பத்திரண மூன்று ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது இலங்கையின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய பத்திரண ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

குறிப்பாக துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கை அணி அதிக ஓட்டங்களை பெறத் தவறியது. வழக்கத்திற்கு மாறாக ஐந்தாவது வரிசையில் வந்த அணித் தலைவர் வனிந்து ஹசரங்க அதிரடியாக 32 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் பெற்ற 67 ஓட்டங்களுமே எதிரணிக்கு சவாலான இலக்கு ஒன்றை நிர்ணயிக்க உதவியது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணி தனது துடுப்பாட்ட வரிசையில் அதிக அவதானம் செலுத்துவது முக்கியமாகும். குறிப்பாக ஒருநாள் தொடரில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய பத்தும் நிசங்க மற்றும் அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியுஸ் மற்றும் முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய மூவரும் தலா 6 ஓட்டங்களையே முதல் போட்டியில் பெற்றிருந்தனர்.

வழக்கம்போல் ஆப்கான் அணி துடுப்பாட்டத்தில் ஆரம்பத்தில் சிறப்பாக ஆடி கடைசி ஓவர்களில் மளமளவென்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது முதல் போட்டியில் தோல்வியை சந்திக்க காரணமானது. எனினும் அந்த அணி தனது தவறை சரி செய்யும் பட்சத்தில் இலங்கை அணிக்கு கடும் சவாலாக அமையும்.

இன்று இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT